Politics
தேசிய கீதம் புறக்கணிப்பு : “அவர் ஆளுநரா? எதிர்கட்சியா ?” - ஆர்.என்.ரவியை விளாசிய CPIM மாநில செயலாளர் !
நடப்பாண்டின் (2023) முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையோடு தொடங்கியது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். ஆர்.என்.ரவி தமிழில் பேசத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தமிழில் கூறினார்.
தொடர்ந்து அவர் தனது உரையை தொடங்கும்போதே காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு எதிராக தங்கள் எதிர்ப்புகளை காட்டினர். மேலும் அவர்கள் “எங்கள் நாடு தமிழ்நாடு.. தமிழ்நாடு” என்றும், “தமிழ்நாடு வாழ்க..” என்றும் முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து முழக்கம் எழுப்பியபோதும், ஆளுநர் தனது உரையை பேசிக்கொண்டே இருந்தார்.
இருப்பினும் தொடர்ந்து முழக்கத்தை எழுப்பிய அக்கட்சியினர், பின்னர் வெளிநடப்பு செய்ய எண்ணினர். அதன்படி அதிமுகவை தவிர காங்கிரஸ், மதிமுக, விசிக, த.வா.க., உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் தொடர்ந்து ஆளுநர் பேசி வந்தார். அப்போது அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பாக தயாரித்து கொடுக்கப்பட்ட உரையில் இருந்து முக்கிய 5 தலைவர்களின் பெயர்களை தவிர்த்தே பேசினார்.
அதாவது, "தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர்" - ஆகிய 5 பெயர்களை ஆளுநர் தனது உரையில் இருந்து நீக்கி பேசியுள்ளார்.
மேலும் "சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லூயிர் ஒப்புதல், திராவிட மாடல்" - ஆகிய 8 வார்த்தைகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்து வாசித்துள்ளார்.
ஆளுநரின் இந்த முகசுழிக்கும்படியான நடவடிக்கையை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார். அப்போது முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவை மரியாதை இல்லாமல் ஒரு எதிர்க்கட்சி போல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இதனால் தற்போது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் இருந்து பல்வேறு கட்சிகள் தரப்பில் இருந்து கண்டனங்கள் கிளம்பியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் பேசியுள்ளார். அரசின் கொள்கை உரையே அவைக் குறிப்பாக இடம்பெற வேண்டும் என்பது சரியான, வரவேற்க வேண்டிய முடிவு.
முதலமைச்சரின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஆளுநர் அவையில் இருந்து முன்கூட்டியே வெளியேறியுள்ளார். தேசிய கீதத்தை புறக்கணித்து அவமதித்துள்ளார். எதிர்க்கட்சி போல ஆளுநர் நடந்திருப்பது உரிமை மீறல், மிகுந்த கண்டனத்திற்குரியது.
அவையில் இருந்து நடையைக் கட்டிய ஆளுநர், மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும். அதுதான் தமிழ் நாட்டின் விருப்பம். சட்டமன்றத்தில் எழும்பிய முழக்கம், தமிழ் நாடெங்கும் எதிரொலிக்க வேண்டும்.ஆளுநரின் அடாவடிக்கு எதிரான போராட்டக் களத்தில், அனைத்து கட்சிகளும் இணைந்து நிற்க வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!