Politics
பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் நீக்கம்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கேரள அரசு !
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. கேரள மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பான விஷயங்களில் ஆளுநரின் செயல்பாடு காரணமாக மாநில அரசுடன் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டை போல கேரளத்திலும் துணை வேந்தர்களை நியமிப்பதில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு கேரளா ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார்.
இந்த பரபரப்பான சூழலில் 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கவர்னர் ஆரிப் முகம்மது கான் உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்த உத்தரவுக்கு ஆளும் இடதுசாரி அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், துணை வேந்தர்கள் பதவி விலகி தேவையில்லை எனவும் கூறியிருந்தது.
அதைத் தொடர்ந்து ஆளுநரின் உத்தரவை ஏற்க 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும் மறுத்துள்ளனர். மேலும் 11 பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு கேரள ஆளுநர் நோட்டீஸ் அனுப்பியிருந்த விவகாரத்தில் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் விசாரணை முடியும் வரை எடுக்கக்கூடாது என அம்மாநில உயர்நீதிமன்றம் ஆளுநருக்கு அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள கலாமண்டலம் பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கம் செய்து கேரள அரசு அறிவித்துள்ளது. பல்கலைக்கழக விதிகளின்படி வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ள நிலையில் மாநில அரசு இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், இனி ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியிலிருந்தும் ஆளுநரை நீக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் ஆளுநரை அப்பதவியில் இருந்து நீக்க அவசரச் சட்டம் கொண்டு வர பினராயி விஜயன் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ள நிலையில், ஒவ்வொரு பல்கலைக்கழக சட்டவிதியை மாற்றவும் தனி தனி மசோதா கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!