Politics

கோவை கார் வெடிப்பு சம்பவம்: அண்ணாமலையிடம் தான் முதலில் NIA விசாரிக்க வேண்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி!

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே நின்றுகொண்டிருந்த மாருதி கார் ஒன்று கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதிகாலை சுமார் 4 மணியளவில் திடீரென பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது. இதையடுத்து இந்த வெடி விபத்து நிகழ்வு குறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இதில்தொடர்பு இருப்பதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, அவர்களை அடுத்த மாதம் 8-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த சம்பவத்தை குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு போலியான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இந்த விவகாரம் மாநிலத்திற்கும் அப்பால் இருப்பதாக கூறி, இதனை என்.ஐ.ஏ விசாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார்.

இதனையடுத்து தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று என்.ஐ.ஏ விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டு, என்.ஐ.ஏ விசாரணையை கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில் இன்று கோவையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மேற்கு மண்டல ஐ.ஜி, கோவை மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோவை மாநகர மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பலரும் போலியான கருத்துக்களை தெரிவித்து வருவதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டுள்ளனர். சிலர் குறுகிய மனப்பான்மையுடன் கோவை சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் நடந்த பிறகு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு கோவையில் அமைதியை காவல்துறை நிலைநாட்டியது. பொதுமக்கள் எந்தவொரு இடையூறுமின்றி தீபஒளி பண்டிகையை கொண்டாடினர். போர்க்கால அடிப்படையில் காவல்துறை தீவிரமாக செயல்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கோவையில் பதற்றம் நிலவியது போல செய்திகள் வெளியிடுவது வருத்தமளிக்கிறது. அரசியல் உள்நோக்கத்துடன் யாரும் செய்திகள் வெளியிட வேண்டாம். அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுபவர்களுக்கு ஊடகங்கள் இடமளித்துவிடக்கூடாது.

கோவை சம்பவத்தின் தீவிரத்தன்மையை கருதியே முதலமைச்சர் என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரைத்தார். மாநிலம் கடந்தும் விசாரணை தேவை என்பதால் தான் என்.ஐ.ஏ., விசாரணையே தவிர, பிறர் கூறியதால் தான் என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்ற முடிவு செய்ததாக கூறுவது தவறு.

கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு தகவல் தெரிவித்தவர்கள் யார்? அண்ணாமலையிடமும் என்.ஐ.ஏ., விசாரணை நடத்த வேண்டும். முப்படை தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தபோது பா.ஜ.க வாய் திறக்காதது ஏன் ? தீவிரவாத தாக்குதல்களுக்கு எத்தனை முறை பிரதமர் வாய் திறந்துள்ளார்?.

ஆனால் இந்த சம்பவத்தை பற்றி இவ்வளவு பூதாகரமாக ஆக்குகிறார்கள். கோவை சம்பவத்தை பா.ஜ.கவினர் அரசியலாக்கி, பொதுமக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தற்போது போராட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: அம்பேத்கரின் சிலை திறப்பு : “அண்ணல் காட்டிய சமத்துவப் பாதையே இந்தியாவுக்கான பாதை” - முதல்வர் சூளுரை!