Politics

பாகிஸ்தான் பூர்விகம்- கர்நாடக மருமகன்.. இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்கும் ரிஷி சுனக்கின் பின்னணி என்ன?

இங்கிலாந்தின் பழமைவாத ( கன்சர்வேடிவ் ) கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் 2019ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே உலகளவில் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அவரது அமைச்சரவை சகாக்களே அவர் மீது கடும் விமர்சனத்தை வைத்தனர்.இதன் காரணமாக அவர் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் அடுத்த பிரதமராக வரப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், நிதித்துறை அமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றனர்.

ஆரம்பத்தில் அதிக ஆதரவு பெற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் அடுத்த சுற்று செல்ல செல்ல ஆதரவை இழந்து வந்ததாக தகவல் வெளியானது. அதன்பின்னர் பழமைவாத கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களித்த இந்த தேர்தலில் இறுதிச்சுற்றில் வென்று லிஸ் ட்ரஸ் இங்கிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராக தேர்வாகினார்.இவர் பதவியேற்றதும் அவர் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டார். குறிப்பாக லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை பெரும் புயலை கிளப்பியது. அரசு மக்களை விடுத்து பணக்காரர்களை வளர்த்து வருவதாக விமர்சனங்கள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து பதவியேற்ற 45 நாட்களில் இங்கிலாந்து பிரதமர் பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அடுத்த கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கட்சி தலைவரே பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதால் இந்த தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த போட்டியில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் தலைவர் பென்னி மொரடான்ட் ஆகியோர் இருப்பதாக இங்கிலாந்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு 100க்கும் குறைவாக இருந்த காரணத்தால் போரிஸ் ஜான்சன் மற்றும் பென்னி மார்டாண்ட் ஆகியோர் அடுத்தடுத்து போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து விரைவில் இங்கிலாந்து (பிரிட்டன்) பிரதமராக அவர் பதவியேற்கவுள்ளார்.

இந்த நிலையில் அவர் குறித்த தேடல் இணையத்தில் அதிகரித்துள்ளது. ரிஷி சுனக்கின் தந்தை வழி மூதாதையர்கள் பிறந்த இடம் தற்போது பாகிஸ்தானின் குஜ்ரான்வாலாவில் உள்ளது. பின்னர் 1960-களில் அவர்கள் கென்யாவுக்கு சென்றனர். அதன்பின்னர் ரிஷி சுனக்கின் தந்தை அங்கிருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார்.

புகழ்பெற்ற வின்செஸ்டர் கல்லூரி, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில் அரசியல், பொருளாதாரம், தத்துவம் மேலாண்மை கல்வியை பயின்ற ரிஷி சுனக்,2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை கோல்டுமேன் சாக்ஸ் முதலீட்டு வங்கியில் ஆய்வாளராக பணியாற்றினார். அதைத் தொடர்ந்து இந்திய தொழிலதிபர் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி நடத்தி வந்த கடாமரான் வென்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக கடந்த 2013 முதல் 2015 ஆம் ஆண்டு வரை பணியாற்றிய ரிஷி சுனக், நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதா மூர்த்தியை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு கிருஷ்ணா, அனோஸ்கா என 2 மகள்கள் உள்ளனர்.

2015ம் ஆண்டு அரசியலில் நுழைந்த ரிஷி சுனக் கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளராக ரிச்மாண்ட் தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். அதே தொகுதியில் தொடர்ந்து 2 முறை அவர் வெற்றிபெற்றார். கடந்த 2018 ஆம் ஆண்டு பிரிட்டனின் உள்ளாட்சி அரசியல்துறை அமைச்சராக பதவியேற்ற அவர் 2019 ஆம் ஆண்டு பிரிட்டன் கருவூலத்தின் தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டுபோரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதியமைச்சராக பொறுப்பேற்ற அவர் இந்த ஆண்டு ஜூலை வரை பதவிவகித்தார். இந்த நிலையில் தற்போது முதல் முறையாக பிரிட்டனின் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

Also Read: ஹரியானா : நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி.. விநாயகர் சிலை கரைப்பின் போது நிகழ்ந்த சோகம்!