Politics

"உங்களைப் போல நாங்கள் போரில் ஈடுபடவில்லை" -அமெரிக்க அதிபரின் கருத்துக்கு இம்ரான் கான் பதிலடி!

உலகில் கொடிய ஆயுதமாக கருத்தப்படுவது அணு ஆயுதங்களே. இரண்டாம் உலகப்போர் காலத்தில் அமெரிக்காவால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆயுதம் ஜப்பானின் மீது வீசப்பட்டது. இதில் ஷிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் அடியோடு நாசமாகி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

அதன்பின்னர் அணு ஆயுதங்களின் சக்தியை புரிந்துகொண்ட பிற நாடுகள் அதை உருவாக்க கடுமையாக முயன்று அதில் சில நாடுகள் வெற்றிபெற்றன. தற்போதைய நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் அணு ஆயுத வல்லமை கொண்ட நாடுகளாக இருக்கின்றன.

இதில் வடகொரியாவுக்கு அணு ஆயுத ரகசியங்களை பாகிஸ்தான் கொடுத்ததாக பல ஆண்டுகளாக சர்ச்சை இருந்து வருகிறது. மேலும், அணு ஆயுதம் பிற நாடுகளுக்கு செல்லாமல் தடுக்க பல்வேறு முயற்சிகளை உலகநாடுகள் எடுத்து வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற பிரசாரக்குழு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கலந்துகொண்டார். அப்போது பிற நாடுகள் உடனான அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை குறித்து அவர் விளக்கமளித்தார்.

அப்போது பேசிய அவர், "எனது பார்வையில் உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. எந்த வகையான ஒற்றுமை, ஒருங்கிணைப்பு இல்லாத நிலையில் அணு ஆயுதங்களை பாகிஸ்தான் வைத்துள்ளது" எனக் கூறினார். அவரின் இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளர்.

ஜோ பைடனின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், அமெரிக்காவை போல நாங்கள் போரில் ஈடுபடவில்லை. எங்களிடம் பாதுகாப்பான அணு சக்தி கட்டுப்பாடு உள்ளது" எனக் கூறியுள்ளார்.

Also Read: தேர்வின்போது ஆடைகளை கழற்ற சொன்ன ஆசிரியர்.. தீக்குளித்து உயிரை மாய்த்த பள்ளி மாணவி : ஜார்கண்டில் பயங்கரம்!