Politics

"ஆங்கிலேயர் காலத்தில் கூட இந்த அளவு வரி கிடையாது" -ஒன்றிய அரசை காட்டமாக விமர்சித்த அரவிந்த் கெஜ்ரிவால் !

இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்கள் பயன்படுத்தி வரும் அத்தியாவசிய பொருட்களுக்கு எல்லாம் GST வரி விதித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட அரசி, தயிர், கோதுமை மாவு, பருப்பு, உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு 5% GST வரி விதித்துள்ளது. ஆனால் பணம் உள்ளவர்கள் மட்டுமே வாங்கும் வைரத்திற்கு 5% வரி தான் வித்துள்ளது. இந்த வேறுபாடான GST வரி விதிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதனிடையே சமீபத்தில் ஆமதாபாத்தில் உள்ள வாடிலால் இண்டஸ்ட்ரீஸ் சார்பில் குஜராத்தில் உள்ள GST வரி விவகார தீர்ப்பாயத்தில் அதில் சப்பாத்திக்கு 5 சதவீத GST விதிக்கப்படும் நிலையில் பரோட்டாவுக்கு 18 சதவீதம் விதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த தீர்ப்பாயம் பரோட்டாவுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டது சரி தான் என உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து GST வரி விவகார மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம்மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், சப்பாத்திக்கும், பரோட்டோவுக்கும் வேறுபாடு உள்ளது. எனவே சப்பாத்தி, ரொட்டி வகையில் பரோட்டாவை சேர்க்க முடியாது என்று கூறி 18 சதவீத GST சரி என தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தை குறிப்பிட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ள அவர், "ஆங்கிலேயர்கள் காலத்தில் கூட உணவு பொருட்களுக்கு வரி விதிக்கவில்லை. இன்று நாட்டில் உள்ள பணவீக்கத்திற்கு மிகப்பெரிய காரணம் ஒன்றிய அரசின் அதிகபட்ச GST வரி விதிப்பே. இது குறைக்கப்பட்டு, மக்களை பணவீக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Also Read: தகராறில் திருடப்பட்ட பாஜக தலைவரின் வைர மோதிரம் -அதிரடி திருப்பமாக பாஜக செயலாளர் கைது.. கோவையில் பரபரப்பு!