Politics

ஜெ.,மரணம்: ’எனக்கு எதுவுமே தெரியாது’ - ஓ.பி.எஸ். ; அப்போ ஏன் விசாரணை கமிஷன் கேட்டீங்க? - ஆணையம் கேள்வி!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது, எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்ற விவரம் எனக்கு தெரியாது என ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரண வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜாராகத நிலையில், 9வது முறையாக சம்மன் அனுப்பப்பட்ட பின் ஆறுமுகசாமி கமிஷன் முன் இன்று ஆஜரானார் ஓ.பன்னீர்செல்வம்.

அப்போது விசாரணை கமிஷன் முன் ஓ.பன்னீர்செல்வம் அளித்த வாக்குமூலத்தின் விவரம்:

2016ம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற எந்த விவரமும் எனக்கு தெரியாது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சொந்த ஊரில் இருந்த போது நள்ளிரவு நேரத்தில் என் உதவியாளர் மூலம்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என தெரிந்து கொண்டேன். அடுத்த நாள் பிற்பகலில் அப்போலோ மருத்துவமனை சென்ற போது அங்கிருந்த தலைமைச் செயலாளரிடம் விவரங்களை கேட்டறிந்தேன் என்ற் கூறியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

விசாரணை ஆணையம் அமைக்க கோரியது யார் ? ஆணையம் அமைக்க முடிவு செய்தது என ஆறுமுகசாமி ஆணையம் எழுப்பிய கேள்விக்கு பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டது என ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனை அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் மெட்ரோ ரயில் நிகழ்வில் கலந்து கொண்டபோது ஜெயலலிதாவை பார்த்தேன் எனவும் அதற்கு பின்னர் அவரை பார்க்கவில்லை என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய் அதிகமாக இருக்கிறது என்பதை தவிர அவருக்கு இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைய கோப்பில் துணை முதலமைச்சர் என்ற அடிப்படையில் நானும் கையெழுத்திட்டுள்ளேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

Also Read: ஜெ.,மரணம்: 75 நாளும் அப்போலோவில் இருந்த இளவரசி விசாரணை கமிஷனில் அளித்த வாக்குமூலத்தால் பரபரப்பு!