Politics

பாடத்திட்டத்தை காவிமயமாக்குவதா? விசாரணை வளையத்தில் சிக்கிய கண்ணூர் பல்கலை - பினராயி விஜயன் அதிரடி!

இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ்-ம் பாஜகவும் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. அதில் ஒன்றாக கல்வியை கையில் எடுத்து தங்களது சித்தாந்தங்களை திணித்துவிட வேண்டும் எனவும் கங்கனம் கட்டி வருகின்றன.

அவ்வகையில் கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழக முதுகலை பாடத் திட்டத்தின் 3வது செமஸ்டர் பாடத் திட்டம் அண்மையில் மாற்றியமைக்கப்பட்டது.

அதில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்வ செயற்பாட்டாளர்களான கோல்வால்கர், சாவர்க்கர், தீனதயாள் உபாத்தியாயா ஆகியோர் தொடர்பான பாடங்கள் இடம் பெற்றிருக்கிறது.

இதனைக் கண்டு அதிர்ச்சியுற்ற கேரள மாணவர் அமைப்பு, இஸ்லாமிய மாணவர் கூட்டமைப்பு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் பாடத்திட்ட நகலை தீயிட்டு எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பின் போது பல்கலைக்கழக துணை வேந்தர் கோபிநாத் ரவிந்திரன் அரசியல் பாடப்பிரிவை காவிமயமாக்குவதாக குற்றஞ்சாட்டுவது தவறு எனக் கூறியுள்ளார்.

மேலும் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் இவ்விவகாரம் குறித்து அம்மாநில கல்வி அமைச்சர் ஆர்.பிந்து விளக்கம் கேட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் இது தொடர்பாக ஆய்வு செய்ய முதலமைச்சர் பினராயி விஜயன் இருநபர் கமிட்டியை நியமித்திருக்கிறார். அந்த கமிட்டியின் பரிந்துரைப்படி பல்கலைக்கழகத்தின் மீதான நடவடிக்கை அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: ”மலையாளிகளின் சித்திரத்தை மாற்றிய வரலாற்று நாயகர் மு.க.ஸ்டாலின்” - புகழ்ந்து தள்ளிய கேரள தொலைக்காட்சி!