Politics

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வரிசை கட்டும் புகார்கள் : அடுத்து விஜயபாஸ்கரா? தங்கமணியா? உதயகுமாரா?

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் ஊழலும் முறைகேடுகளும் தலைவிரித்தாடாத துறைகளே இல்லை என்ற அளவில் அனைத்து துறைகளும் கறை படிந்து போயின.

அவற்றை களையும் விதமாக தேர்தல் பிரசாரத்தின் போதே திமுக தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு அமைச்சர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அவ்வகையில் அண்மையில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தியதில் முக்கியமான ஆவணங்களும், நகை, பணம் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில்தான் தற்போது முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு, அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள், அவருக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்களின் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை நேற்று தொடங்கி இதுகாறும் நீடித்து வருகிறது.

இப்படியாக மக்களின் வரிப்பணத்திலும் அரசாங்கத்துக்கு வரவேண்டிய நிதியை வைத்து ஊழலில் திளைத்த அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவராக லஞ்ச ஒழிப்புத்துறையின் பிடியில் சிக்கி வருகின்றனர்.

இதனால் அதிமுகவின் மேலிடம் வரையில் பீதி குடிக்கொண்டுள்ளது. அதன்படி அடுத்தடுத்து யாரெல்லாம் அரசின் சோதனை வளையத்தில் சிக்கப் போகிறார்கள் என தங்கமணி, விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் என பலரும் அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள்.

Also Read: கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல்; முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது மோசடி புகார்

இந்நிலையில், சென்னையில் கூவம் கரை ஓரம் வசித்த மக்களை அப்புறப்படுத்தி ரூ.1575 கோடி மதிப்புள்ள 10.5 ஏக்கர் அரசு நிலத்தை பாஷ்யம் நிறுவனத்துக்கு விற்றதாக அதிமுகவின் முன்னாள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது கடந்த ஏப்ரல் மாதம் தலைமைச் செயலாளரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அதிமுக ஆட்சியின் போது கோயம்பேடு மெட்ரோ நிலையத்தின் பெயர் பலகையை அகற்றி தனியாரான பாஷ்யம் நிறுவனத்தின் பெயர் பலகையை வைத்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read: ”அடுத்து நாமதான்..” : அடுத்தடுத்து சிக்கி வரும் முன்னாள் அமைச்சர்களால் பீதியில் அ.தி.மு.க புள்ளிகள்!