Politics

வாக்கு வங்கியை பலப்படுத்தும் ’மயக்க பிஸ்கட்டுகளே’ ஒன்றிய அமைச்சரவை மாற்றம்; சமூகநீதி மீதான காதலால் அல்ல!

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்கு ஒன்றிய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பது நமக்கு மகிழ்ச்சி - எப்படியோ பெரியார் வெற்றி பெற்றுள்ளார் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்

அதன் விவரம் பின்வருமாறு:-

”2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இரண்டாவது முறை வெற்றி பெற்று தனது ஒன்றிய அமைச்சரவையை அமைத்தார் பிரதமர் மோடி. அதற்குப் பிறகு அந்த அமைச்சரவையில் மொத்தம் 12 அமைச்சர்களை பதவி விலகச் செய்து புதிதாக கூடுதல் அமைச்சர்கள் பலரையும், ஏற்கெனவே இருந்த ஸ்டேட் அமைச்சர்களை கேபினட் அமைச்சர்களாக உயர்த்தியும், 7.7.2021 அன்று மாலை பதவிப் பிரமாணம் எடுக்க வைத்தார்.

58 இல் 32 பேர் பார்ப்பனர்கள் உள்பட உயர்ஜாதியினர்!

2019 இல் பிரதமர் மோடி அமைத்த தனது அமைச்சரவையில் - 58 பேரில்,

கேபினட் அமைச்சர்கள் - 24

ஸ்டேட் அமைச்சர் (தனிப் பொறுப்பு) - 9

இணை அமைச்சர்கள் - 24

மொத்தம் - 58 பேர்

இந்த ஏற்பாட்டில் பார்ப்பனர்கள் உள்பட உயர்ஜாதியினர் (58 இல்) 32 பேர்! (பெரும்பான்மை அவர்களே)

எஞ்சியவர்களில்,

பிற்படுத்தப்பட்டோர் - 13 பேர்

எஸ்.சி., - 6

எஸ்.டி. - 4

சீக்கியர் - 2

இஸ்லாமியர் - 1

என்பதாகும்.

2021 இல் - நேற்று முன்தினம் (7.7.2021 இல்) பழைய அமைச்சரவையை மாற்றியமைத்ததில் (12 பேர் பதவி விலகிய நிலையில்), புதிதாக இடம்பெற்றவர்களைச் சேர்த்த பிறகு, தற்போதுள்ள நிலவரப்படி, மோடி அமைச்சரவையில் இடம்பெற்றவர்களில்,

1. எஸ்.சி., வகுப்பினர் 12 பேர்

2. எஸ்.டி., பழங்குடியினர் 8 பேர்

3. ஓ.பி.சி. என்ற இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27

பெண் அமைச்சர்கள் - 11

என்றவாறு, 25 மாநிலங்கள் - ஒன்றிய பிரதேசம் உள்பட அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர்.

43 பேரில் 36 பேர் புது முகங்கள்!

நேற்று முன்தினம் ஒன்றிய அமைச்சரவையில் இடம்பெற்ற 43 பேரில் 36 பேர் புது முகங்கள்!

இரண்டாண்டு காலத்தில், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., ஆகிய மூன்று வகுப்பார், பெண்களுக்கான பிரதிநிதித்துவம் உயர்ந்துள்ளது; மேலே காட்டிய 2019 இல் அமைந்த நிலை - 2021 இல் ஏற்பட்ட மாற்றம்மூலம் கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளனர்.

இது எதைக் காட்டுகிறது?

பா.ஜ.க.வுக்குத் தொடர்ந்து ஏற்பட்டுவரும் சரிவுகளை ஏற்படாது தடுக்கவே...

அடுத்த ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க.வுக்குத் தொடர்ந்து ஏற்பட்டுவரும் சரிவுகளை ஏற்படாது தடுக்கவும், கூடுதல் இடங்களைப் பெறவும் - இந்த Social Engineering என்ற சமூக ஜாதிகளுள் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, வாக்கு வங்கியை பலப்படுத்தும் 'வியூகமாகவே' 'வித்தைகளாக', 'மயக்க பிஸ்கட்டுகளாக', ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்களிடம் ஆதரவு பெறவே திட்டமிட்டு செய்யப்படும் ஏற்பாடு என்பதை நாடு முழுவதும் உள்ளோர் புரிந்துகொள்ளும் நிலைதான் ஏற்பட்டுள்ளது! மன மாற்றமோ, சமூகநீதி மீது ஏற்பட்ட 'காதலோ' அல்ல!

சமூகநீதியில் உள்ள நியாயங்களையும், தேவைகளையும் உணர்ந்தே பா.ஜ.க. பிரதமர் மோடி - ஆர்.எஸ்.எஸ். இதனைச் செய்திருக்கிறதா என்றால், நிச்சயம் 'இல்லை' என்பதே உண்மையான விடையாக இருக்க முடியும்!

திடீரென்று சிறுபான்மையினர்மீது ‘கரிசனம்!’

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்திற்கு திடீரென்று சிறுபான்மையினர் மீது ''கரிசனம்'' ஏற்பட்டுள்ளது - குறிப்பாக முஸ்லிம்கள் மீது!

''முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துபவர் - அதுவும் பசுவைக் காக்க மற்றவர்களைக் கொல்லுபவர்கள் உண்மையான ஹிந்துவாக இருக்க முடியாது!''

''இந்தியாவின் அனைத்து மக்களின் (முஸ்லிம்கள் உள்பட) ரத்தத்திலும் ஹிந்து மரபணுவே ஓடுகிறது'' என்று பசு மாமிசம் வைத்திருந்தார் என்ற பொய்க் குற்றச்சாட்டுக்கு முகம்மது அக்லாக் பலியான நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததற்காக இப்போது கண்டனம், வருத்தம்!

என்னே தலைசிறந்த 'மனிதாபிமானம்' பார்த்தீர்களா!

ஓர் ஒப்பனைத் தோற்ற வெற்றிமுகம் காட்டுகிறது!

உத்தரப்பிரதேசத்தில் ஊராட்சி மன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பா.ஜ.க., ''சுயேச்சைகளைப் பிடித்து'' அதன்மூலம் பெருமளவு இடங்களில் வெற்றி என்ற ஓர் ஒப்பனைத் தோற்ற வெற்றிமுகம் காட்டுகிறது!

இது மற்றொரு வகை வித்தை! ஆர்.எஸ்.எஸ். (ஆரியத்தைப்) பற்றி அண்ணா சொன்னார்,

''பேசுநா இரண்டுடையாய் போற்றி!

தந்திரமூர்த்தி போற்றி,

தாசர்தம் தலைவா போற்றி!''

என்ற நிலைதான்!

ஒன்றிய அரசில் 2019 இல் இருந்த கூட்டணிக் கட்சிகளில் எத்தனை பேர் இப்பொழுது இருக்கிறார்கள்? என்பதற்கு என்ன விடை?

உலகறிந்த ரகசியம்!

தேசிய ஜனநாயக முன்னணியிலிருந்து (என்.டி.ஏ.) சிவசேனாவும், அகாலிதளம் போன்ற பல ஆண்டுகால கூட்டணிக் கட்சிகள் ஏன் விலகின? சின்ன கட்சிகளைக் கூடப் பிளந்து, பலரை ஆள் தூக்கிகளாக்கி, 'ஆயாராம் காயாராம்' வித்தைகள் மூலமாக வெற்றிக்கனியை வரும் தேர்தல்களில் பறிக்கவே இந்த ஏற்பாடு என்பது உலகறிந்த ரகசியம்!

அ.தி.மு.க. தலைமை தங்களை பா.ஜ.க.விடமிருந்து விடுவித்துக்கொள்ள மனமின்றி - தொண்டர்கள் விருப்பத்திற்கு மாறாக - தமிழ்நாட்டில் தங்களது இறுதி அத்தியாயத்தை வேகமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்! சில தமிழ்நாட்டு கூட்டணி கட்சிகள் - ஒன்றிய அமைச்சர் பதவிக்கு எதிர்பார்த்து ஏமாந்த காட்சியும் பரிதாபக் காட்சியாகும்.

இந்த புதிய ஏற்பாட்டில், தமிழ்நாட்டுப் பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் அவர்கள் ஸ்டேட் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்!

ஜனநாயக முறைப்படி அவருக்கு நமது வாழ்த்துகள் - கொள்கை, லடசியங்களில் வேறுபட்டாலும்கூட!

ஆக்கபூர்வமான தமிழ்நாட்டு உரிமைப் பிரச்சினைகளில் அவரது பணியும், பங்களிப்பும் பழியை சுமப்பதாக இல்லாமல்,பாராட்டத்தக்க வகையில் (அவரது கட்சியும், தலைமையும் ஒருபுறமிருந்தாலும்) நடந்துகொள்வது முக்கியமாகும்!

பெரியார் வெற்றி பெற்றுள்ளார் என்பதே அதன் அடையாளம்!

பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய அணுகுமுறை அவருடையதாக இருக்கவேண்டும்; பிரச்சினைகளை உருவாக்குவதாக இருக்கக் கூடாது என்றே பொது நிலையில் உள்ளவர்கள் விரும்புவர்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தவர் ஒருவருக்கு இப்படிப்பட்ட வாய்ப்பு என்பதும் நமக்கு மகிழ்ச்சி! பெரியார் வெற்றி பெற்றுள்ளார் என்பதே இதன் அடையாளம் ஆகும்.”

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: “தனது கூட்டுக் களவாணிகளுக்காகவே கூட்டுறவுத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கிய மோடி அரசு” : யெச்சூரி சாடல்!