Politics

தமிழகத்திலும் வட இந்திய அரசியல் செய்யும் பா.ஜ.கவுக்கு தொல்.திருமாவளவன் பதிலடி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் ‘இந்தியா டுடே’ செய்தி நிறுவனம் ‘தென்னிந்தியா 2021’ என்கிற பெயரில் அரசியல் கருத்தரங்கு நிகழ்வை நடத்தி வருகிறது.

தேர்தலையொட்டி நடத்தப்படும் இந்த அரசியல் கருத்தரங்கில் பல்வேறு கட்சிகளின் சார்பில் முக்கிய தலைவர்கள் பங்கேற்று விவாதித்து வருகின்றனர்.

இந்நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “ஒரே நாடு; ஒரே கலாச்சாரம் என்பதே பா.ஜ.க-வுடைய தேசியவாதம். இந்த ஒற்றைக் கலாச்சார பிரச்சாரம் ஜனநாயகத்திற்கு எதிரானது. பன்மைத்துவத்திற்கு எதிரானது.

என் மொழி தமிழ்; நான் தமிழன்; எல்லோரும் ஏன் ஒரே கூரைக்குள் வரவேண்டும்? உங்களைப் பொறுத்தவரை இந்துக்கள் மட்டுமே இந்தியர்கள். நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல; பா.ஜ.க-வின் கொள்கைக்கு எதிரானவர்கள்.

நாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை பற்றி கவலைப்படவில்லை. நாங்கள் கடந்த தேர்தலை விட குறைவான தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பது குறித்து எங்களுக்குக் கவலையில்லை.

இது வெறும் தேர்தலுக்கான கூட்டணி அல்ல. நாங்கள் தமிழகத்தில் வகுப்புவாதத்திற்கு எதிரான போரை நிகழ்த்துகிறோம். நாங்கள் சமூக நீதி வெல்ல விரும்புகிறோம். இது சமூக நீதிக்கான போர்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: இந்த தேர்தலிலும் களம் காணும் அண்ணா... கருணாநிதி... அன்பழகன் : திராவிட இயக்கத்தின் சிறப்பு இதுதான்!