Politics

1965 மொழிப்போர் காலத்தில் கோவாவில் என்ன செய்து கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர் ? : உண்மையை உடைத்த ஆ.ராசா

மதுராந்தகத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் நிகழ்வில் கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கலந்து கொண்டு உரையாற்றினார். எழுச்சி மிக்க இந்த நிகழ்வு திருவள்ளூர் மத்திய மாவட்டப் பொறுப்பாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, திராவிட முன்னேற்றக் கழகம் மொழிப்போருக்காக எத்தகைய தியாகங்களை செய்திருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுப் பேசினார். மேலும், அ.தி.மு.க.,வுக்கும், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த நாளுக்கான வரலாறு என்ன என்று தெரியுமா? அது தெரியாமலேயே இந்த நிகழ்வை எதற்காக நீங்கள் கொண்டாடுகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், ‘1938ம் ஆண்டு தொடங்கிய மொழிப்போர் மிகவும் அறச்சீற்றத்துடன் நடந்தது. 70 ஆண்டுகளைக் கடந்தும் இந்தப் போராட்டத்தை நாங்கள் மிகவும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம். கீழப்பழூவூர் சின்னச்சாமியில் தொடங்கி 9 உயிர்களைப் பலிகொடுத்து இருக்கிறோம்.

இது முழுக்க முழுக்க திராவிட இயக்கத்திற்குச் சொந்தமான போராட்டம். வெற்று விளம்பரத்திற்காக அ.தி.மு.க.,வும் எடப்பாடியும் இன்று வீரவணக்க நாள் கொண்டாடி வருகிறார்கள். அதன் வரலாறு கொஞ்சமாவது உங்களுக்குத் தெரியுமா?

இங்கே தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் என இங்கே திராவிட இயக்கம் வீறு கொண்டு போராடிக்கொண்டிருந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் தனது நாயகி ஜெயலலிதாவோடு கோவாவில் ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பில் இருந்தார்கள் இதுவே வரலாறு.

எனவே, வீரவணக்க நாள் கொண்டாடுவதற்கு எம்.ஜி.ஆருக்கே அருகதை இல்லை. எம்.ஜி.ஆருக்கே அருகதை இல்லாதபோது அவருக்கு சேவகம் செய்து வந்த ஜெயலலிதாவுக்கோ, அந்த ஜெயலலிதாவுக்குத் தோழியாக இருந்த சசிகலாவுக்கோ, அந்த சசிகலாவின் காலை நக்கி பிழைப்பு நடத்தி வரும் எடப்பாடிக்கோ துளியளவும் அருகதை இல்லை.

மேலும் எம்.ஜி.ஆர் இந்தப் போராட்டத்தை ஒடுக்க பல வழிகளில் ஈடுபட்டார். அந்த வரலாற்றையே ஜெயலலிதாவும், இப்போது எடப்பாடி பின்பற்றி வருகிறார்கள்’ என்று குறிப்பிட்டார்.