Politics

“அதிகார மமதை தலைக்கேறி கேவலமான அரசியல் நாடகம் நடத்தும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி” - தி.மு.க MLA கண்டனம்!

“அதிகார மமதை என்ற போதை” தலைக்கேறி, இதுபோன்ற கேடு கெட்ட, கீழ்த்தரமான, கேவலமான அரசியல் நாடகத்தை அரங்கேற்றியிருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மாண்புமிகு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகம் முழுதும், “அதிமுகவை நிராகரிக்கிறோம்” என்ற தலைப்பில் “மக்கள் கிராம சபைக் கூட்டங்களை” நடத்த கழக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களை நேரில் சந்தித்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள், இன்று (02.01.2021) கோவை மாவட்டம் தேவராயபுரம் பகுதியில் மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் பேசி முடித்த பின் மக்களில் சிலர் தங்கள் கருத்துகளை எடுத்து வைத்தனர்.

அப்போது கூட்டம் முடியும் தருவாயில் ஒரு பெண் எழுந்து, தகாத முறையில் கூட்டத்திற்கு எதிரான கருத்துக்களைப் பேசி கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றார். அதன் பின்னர் , மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், தி.மு.க பெண் நிர்வாகிகள் அந்த பெண்ணை கூட்டத்தில் இருந்து வெளியே அனுப்பினார்கள்.

அந்த பெண் கூட்டத்திலிருந்து வெளியே அனுப்பப்பட்டதும் , அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவரை உடனடியாக அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய காணொளி சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் மூலமாக, மக்கள் கூட்டத்தில், அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட அந்தப் பெண், கோவை அ.தி.மு.கவில் மகளிர் அணி மாவட்ட பொறுப்பில் உள்ளவர் என்பதும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆலோசனையின் பேரில் கூட்டத்தில் குழப்பத்தை விளைவிக்க வந்தவர் என்பதும் “உள்ளங்கை நெல்லிக்கனி” போல தெரிய வருகிறது.

உள்ளாட்சித் துறை அமைச்சரா அல்லது ஊழலாட்சித் துறை அமைச்சரா என்று தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் கேட்கக்கூடிய அளவில் ஊழலில் மிகப்பெரிய வரலாற்று சாதனைகளை புரிந்து கொண்டு, ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு திமுக நடத்தும் மக்கள் கிராம சபைக் கூட்டங்களுக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவைப் பார்த்து , மிரட்சியடைந்து, கதி கலங்கிப் போய் இதுபோன்ற கேடுகெட்ட முறையில், சிறிது கூட அரசியல் நாகரீகம் தெரியாமல் மேற்கண்ட கீழ்த்தரமான நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்.

மக்களைப் பற்றிச் சிந்திக்காமல், மக்களைக் காப்பாற்றுவதை தவிர்த்துவிட்டு, தங்களைச் சிறைக்கு செல்லாமல் காப்பாற்றிக் கொள்ளும் நிலையில் இருக்கும் இந்த கேடுகெட்ட, தமிழக உரிமைகளை பறி கொடுத்த ஆட்சியைப் பற்றி தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற உண்மை கூடத் தெரியாமல், முட்டாள்தனத்தின் உச்சியில் நின்று கொண்டு, “சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று போய் விடும்“ என்ற பழமொழி போல, கோவையில் மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்திய கழக நிர்வாகிகளை தொடர்ச்சியாக கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமும், அ.தி.மு.க பெண்களை அனுப்பி, குழப்பங்களை விளைவிப்பதன் மூலமும் "மக்கள் கிராம சபைக் கூட்டத்தை, தடுத்து நிறுத்தி விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு, மக்களை மதியாமல் ஆட்டம் ஆடிய மாபெரும் மன்னர்களும், கொடுங்கோலர்களும் மக்களின் புரட்சிக்கு முன்னால் மண்டியிட்டு, தோற்று அதிகாரம் இழந்து, அவமானப்பட்ட கதைகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நினைவுபடுத்தி எச்சரிக்கிறேன்.

“அதிகார மமதை என்ற போதை” தலைக்கேறி, இது போன்ற கேடு கெட்ட, கீழ்த்தரமான, கேவலமான அரசியல் நாடகத்தை அரங்கேற்றியிருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இனி வரும் காலங்களிலாவது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இது போன்ற கீழ்த்தரமான முயற்சிகளை கைவிட்டு அரசியல் நாகரீகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இவை அனைத்துக்கும் மக்கள் மன்றத்தின் முன் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் எச்சரிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “எஸ்.பி.வேலுமணி அரசியலை விட்டுச் சென்றாலும் சட்டப்படி தண்டனை பெற்றுத் தருவேன்” - மு.க.ஸ்டாலின் உறுதி!