Politics
“தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க காங்கிரஸ் கட்சி பாடுபடும்” : மாநில பொறுப்பாளர் உறுதி!
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது,
“இந்திய நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி தொடங்கி அனைத்திலும் மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. புதிய தேசிய கல்விக் கொள்கை மூலம் கல்வியில் மாநில உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது.
மத்திய பா.ஜ.க அரசு அனைத்து மாநிலங்களையும் கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கின்றது. ராஜ்யசபாவில் பெரும்பான்மை இழக்கும்போது அதை மீறி வேளாண் சட்டத்தை நிறைவேற்றினர். பா.ஜ.க அரசு இந்த நாட்டை, நாட்டின் சொத்துகளை விற்று வருகிறது.
பா.ஜ.க தொடர்ந்து ஆட்சி அமைத்தால் இந்திய நாட்டின் எதிர்காலம் இருள் ஆகிவிடும். தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெறும்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், தினேஷ் குண்டுராவ் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு :
“2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்று ஆட்சியமைக்க தமிழக காங்கிரஸ் கட்சி பாடுபடும்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட எங்கள் தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என்ற தமது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பே, ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் என முதன்முதலாக மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததை, நாங்கள் நன்றியுணர்வுடன் நினைவில் கொண்டுள்ளோம்.
இத்தகைய அறிவிப்பால் கவரப்பட்ட தமிழக மக்கள், மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளில், 39 தொகுதிகளில் தி.மு.க தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்தனர்.
அதேபோன்று, மு.க.ஸ்டாலின் அடுத்த முதலமைச்சராக வேண்டும் என்ற ராகுல்காந்தியின் கனவை நிஜமாக்கும் வகையில், வரும் தேர்தலை தி.மு.க.வுடன் காங்கிரஸ் இணைந்து சந்திக்கும்.
2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலை இதுதான் என்பதை நான் வலியுறுத்திக் கூறுகின்றேன்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!