Politics
“தி.மு.கழகத்தின் கொள்கை வீரர்கள் அரும்பணியாற்றிடுவார்கள்” - காதர் மொகிதீன் வாழ்த்து!
தி.மு.க பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துரைமுருகன் தி.மு.க பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர். பாலு ஆகியோருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தி.மு.கழகத்தின் புதிய நிர்வாகிகள்
துரைமுருகன் - பொதுச்செயலாளர்
டி.ஆர்.பாலு - பொருளாளர்
க.பொன்முடி - துணைப் பொதுச்செயலாளர்
ஆ. ராசா - துணைப் பொதுச்செயலாளர்
ஆகியோருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் என்று தேசிய தலைவர் கே.எம். காதர்மொகிதீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இன்று (09.09.2020) விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது :
“துரைமுருகன் அவர்கள் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மனங்கவர்ந்த தம்பியாக அதிகமதிகம் அவருடனேயே உடனிருந்து வலம் வந்தவர். கழகத்தின் கொள்கை கோட்பாடுகளில் சமரசமற்ற ஆழ்ந்த பிடிப்புள்ளவராக, திராவிடச் சிந்தனையின் வற்றாத ஊற்றாக, சமூகக் களப்பணிகளில் கிஞ்சிற்றும் அயராத அரிமாவாக, அரசியல் தளத்தில் நயத்தகு நாகரீக அடையாளமாக, மொழிப் போராட்ட களங்களில் நற்றமிழ் நாயகராக, தாய்மொழி தமிழின் தனிச் சிறப்பைக் காட்டிடும் நல்ல சொற்பொழிவாளராக, அனைத்து சமூக மக்களிடமும் காட்டுகிற சமய நல்லிணக்கத் தூதுவராக, மிகச்சிறந்த சட்டமன்ற சங்கநாதமாகப் போற்றப்படுபவர்.
அவருடைய பொது வாழ்வில் அவர் சந்தித்த சவால்களும், சாதித்த சாதனைகளும், எதிர்கொண்ட சோதனைகளும் ஏராளமானவை. அவைகள் அனைத்தையும் டாக்டர் கலைஞர் அவர்களின் நிழலாகவே இருந்து பயணித்து, வெற்றிகளைக் குவித்து திமுக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றிருக்கும் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன்.
டி.ஆர் பாலு அவர்கள் முத்தமிழ் வேந்தர் டாக்டர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக வாழ்ந்து வருபவர். தி.மு.கழகம் காணும் அனைத்து களங்களிலும் வீரியமிக்க சீரிய செயல் வீரராக, மொழி காக்கும் போராட்டங்களில் முன்னணித் தலைவராக,எதனையும் துணிவுடன் எதிர்கொள்ளும் அரசியல் ஆற்றலராக, நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஓயாத குரலாக, பல்வேறு காலகட்டங்களில் நடுவன் அரசின் ஆற்றல்மிகு அமைச்சராக, வளர்ந்து வரும் இளைய தலைமுறையினருக்கு வேகமும் விவேகமும் கலந்த அடையாளச் சின்னமாகப் போற்றப்படுபவர்.
தலைநகர் டெல்லியில் தமிழகத்தின் தனிச் சிறப்பை தளராமல் தழைத்தோங்கச் செய்பவர், மத்தியில் கூட்டாட்சித் தத்துவத்தின் உயிரோட்டத்தை தலைவர் கலைஞர் வழிநின்று மெய்ப்பித்துக் காட்டி வருபவர். கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்கள் தி.மு.கழகத்தின் உயிர்நாடியாக மென்மேலும் உயர்ந்து சிறக்க உளமார வாழ்த்துகிறேன்.
க.பொன்முடி அவர்கள் தி.மு. கழகத்தின் தலைவர் கலைஞர் அவர்களின் மிகுந்த நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தவர். சமூக சீர்திருத்த களவீரராக, திராவிட கொள்கைகளில் ஆழ்ந்த சிந்தனை மிக்கவராக, 1989 லிருந்து ஐந்து முறை திறம்பட பணிகள் ஆற்றிய தமிழக சட்டமன்ற உறுப்பினராக, தாம் வகித்த அமைச்சர் பொறுப்புகளிலெல்லாம் சிறந்த முத்திரை பதித்தவராக, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவின் திறம்பட நிர்வகிக்கும் மாவட்டச் செயலாளராக, பொதுமக்கள் நலனுக்காக எதையும் துணிவோடு அணுகக் கூடிய செயல்வீரராக இருப்பவர். இன்று தி.மு.கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள க.பொன்முடி அவர்களை நான் மனதாரப் பாராட்டி வாழ்த்துகிறேன்.
ஆ.ராசா அவர்கள் தி.மு.கழகத்தின் உணர்வுப் பிழம்பாக, தலைவர் கலைஞர் அவர்களின் சமூகநீதி உணர்வுகளோடு ஒன்றிப்போனவராகத் திகழ்பவர். இளவயதிலிருந்தே திராவிட மற்றும் பொதுவுடமைக் கொள்கைகளில் ஆழ்ந்திருப்பவராக, தனது கருத்தோட்டங்களை எப்போதுமே வரலாற்று ரீதியாக ஆதாரப்படுத்தி உரையாற்றுபவராக, நாடாளுமன்றத்தில் அவரின் தொடக்கம் முதலே சிறப்புற பணிகள் ஆற்றி எல்லா அரசியல் தலைவர்களின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்தவராக, பல்வேறு துறைகளில் நடுவன் அமைச்சர் பொறுப்பேற்று நவீன காலத்திற்கேற்ப பல புதிய பரிணாமங்களை உருவாக்கியவராக, சமூக நல்லிணக்கத்தை எப்போதுமே வலியுறுத்தி வருகிற ஒரு மத நல்லிணக்க மனித நேயராக விளங்குபவர். இன்று தி.மு.கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள ஆ.ராசா அவர்களை வாழ்த்தி மனதார பாராட்டுகிறேன்.
மேலும், தமிழகத்தின் தனித்திறன் கொண்ட தலைவராக, அனைத்து மக்களின் உரிமை காத்திடும் பாதுகாப்பு அரணாக, அடுத்துவரும் தமிழக முதலமைச்சராகத் திகழும் தி.மு.கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய தலைமையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், கண்ணியமிக்க காயிதே மில்லத் போன்ற நம் வரலாற்றுத் தலைவர்களின் வழிநின்று, தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ் மக்கள் என்கிற முனைப்போடு அரும்பணி ஆற்றிட, புதிய பொறுப்புகளை ஏற்கும் அனைவருக்கும் எனது உவகை பொங்கிடும் உளங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!