Politics
“தனது தலித் பாசத்தை காட்ட பா.ஜ.க ஏன் இவற்றை செய்யக்கூடாது?” - திருமாவளவனின் 15 அதிரடி கேள்விகள்!
தமிழகத்தில், எடப்பாடி பழனிசாமி அரசுடன் இணைந்து அரசியல் மட்டுமே செய்து வரும் மத்திய பா.ஜ.க அரசுக்கு விசிகவின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் 15 கேள்விகளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவின் விவரம் பின்வருமாறு:
1) பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மாநில ஆணையம் இதுகாறும் தமிழகத்தில் அமைக்கப்படவில்லை. அதனை உடனடியாக அமைக்க அ.தி.மு.க அரசிடம் கூட்டணி கட்சியான பா.ஜ.க அறிவுறுத்துமா?
2) சாதிக்கொடுமைகள் எந்த அளவுக்கு மாநிலத்தில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்த விழிப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டத்தை தமிழக முதல்வர் 3 ஆண்டுகளாக நடத்தவில்லை. இது ஆண்டுக்கு இருமுறை என முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்களுடன் நடைபெறவேண்டிய கூட்டம். இதனை நடத்த பா.ஜ.க அரசு வலியுறுத்துமா?
3) பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான துணைத் திட்டம் நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு சட்டம் இயற்றவில்லை. கூட்டணி கட்சியாக உள்ள பா.ஜ.க ஏன் சட்டமியற்றவில்லை என அ.தி.மு.கவிடம் விளக்கம் கோருமா?
4) தமிழகத்தில் சாதிக் கொடுமைகள் அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவண மையம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சரிடம் பா.ஜ.க அரசு விளக்கம் கேட்குமா?
5) தலித் ஊராட்சித் தலைவர்களை அவர்களின் பணிகளை தொடரவிடாமல் தடுப்பதாக 3 இடங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளது. இது போன்று சாதி வெறிச் செயலை வெளிப்படையாக கண்டித்து பா.ஜ.க அரசு நடவடிக்கை எடுக்குமா?
6) பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகாரளிக்க இலவச எண் உள்ளது போல், தலித் மக்கள் மீதான வன்முறை குறித்து புகார் தெரிவிக்க இலவச எண்கள் ஏற்படுத்த தமிழக அரசை மத்திய பா.ஜ.க அரசு வற்புறுத்துமா?
7) பழங்குடிச் சிறுவனை அழைத்து தான் கால் செருப்பை கழட்டச்சொன்ன அ.தி.மு.க அமைச்சர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய தமிழக முதல்வரிடம் பா.ஜ.க வலியுறுத்துமா?
8) தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக முருகன் தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாரா அல்லது தலைமைக்குரிய பண்புள்ளவர் என்பதற்காக என பா.ஜ.க விளக்கமளிக்க வேண்டும்
9) தனது இறுதி மூச்சுள்ளவரை, இந்து மதத்தை, சாதியத்தை, சனாதனத்தை மூர்க்கமாக எதிர்த்த முரட்டு போராளி அண்ணல் அம்பேத்கர். அவரை எதிர்க்காமல் பா.ஜ.க ஆதரிப்பது ஏன்?
10) சாதி ஒழிப்புக்காக ஒரே நாளில் 10 லட்சம் பேருடன் பெளத்த மதத்தை தழுவி, இந்து மதத்தை ஆட்டம் காண வைத்தவர் புரட்சியாளர் அம்பேத்கர். அப்படிப்பட்ட அம்பேத்கர் பா.ஜ.கவுக்கு எதிரியா நண்பரா?
11) தமிழகமெங்கும் சுமர் 12.5 லட்சம் பஞ்சமி நிலங்கள் தலித் அல்லாதோரின் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவை அனைத்தையும் உரியவர்களிடம் கொடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற தீர்ப்பே உள்ள போது, இது குறித்து நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வரிடம் கூட்டணி கட்சியாக உள்ள பா.ஜ.க வலியுறுத்துமா?
12) பஞ்சமி நிலங்களை மீட்பதற்காக வி.சி.க வலியுறுத்தியதன் பேரில் தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது அமைக்கப்பட்ட மருதமுத்து ஆணையத்தை மீண்டும் செயல்படுத்தவோ அல்லது புதிய ஆணையத்தை ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசிடம் பா.ஜ.க வலியுறுத்துமா?
13) சிறுதாவூர் பங்களாவும் பஞ்சமி நிலத்தில்தான் உள்ளது என குற்றச்சாட்டுகள் உள்ளது. இது பா.ஜ.கவுக்கு தெரியுமா தெரியாதா? அதையும் மீட்டு தலித் மக்களிடம் ஒப்படைக்க பா.ஜ.க போராடுமா? இதன் மூலம் தலித் மக்கள் மீதான தன்னுடைய அக்கறையை பா.ஜ.க உறுதிபடுத்துமா?
14) நாடெங்கும் தலைவிரித்தாடும் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு சட்டம் வேண்டும் என்பதில் பா.ஜ.கவின் நிலைப்பாடு என்ன? மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது அப்படி சட்டம் இயற்ற தயங்குவது ஏன்? அச்சட்டத்தை இயற்றும்படி தமிழக அரசையும் பாஜக வற்புறுத்துமா?
15) தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீது அக்கறை இருப்பதாக காட்டிக்கொள்ளும் பா.ஜ.க , இதுகாறும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை முடக்கியது ஏன்? மீண்டும் அதனை நடைமுறைப்படுத்தி தனது தலித் பாசத்தை காட்ட முன்வருமா? என திருமாவளவன் எம்.பி கேள்விகளை முன்வைத்துள்ளார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!