Politics

"பெரியார் சிலையையே உடைக்கும் நிலைக்கு பா.ம.கவினர் சென்றது வேதனையளிக்கிறது" : தொல்.திருமாவளவன் பேட்டி!

சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் இன்று தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "பெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் சிலைகளை உடைப்பது அவமதிப்பது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இது தமிழக அரசின் வலிமையை சோதிக்கும் செயலாக அமைந்துள்ளது. இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடப்பதற்கு அரசின் மெத்தனமான போக்கே காரணம்.

பெரியார், அம்பேத்கர் சிலைகளை அவமதிக்கும் சாதிய மதவாத சக்திகள் யாராக இருந்தாலும் அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தேசியத் தலைவர்கள் அவமதிக்கப்படுவது அரசின் பலவீனத்தைக் காட்டுகிறது. இதை தடுக்க தனி உளவுத்துறை, போலீஸ் படை அமைக்கவேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து பா.ஜ.க.விற்கு ஒத்துழைத்து வரும் அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகள் சிலைகளை அவமதிக்கும் நடவடிக்கைகளுக்கு ஊக்கப்படுத்துவதாக தெரிகிறது.

பெரியார் சிலை உடைப்பில் பா.ம.க முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பதன் முலம் பா.ம.க எந்த திசை வழியில் பயணிக்கிறது எனக் கேள்வி எழுகிறது. பா.ம.க தொண்டர்கள் எந்த வகையில் உறவாடுகிறார்கள். இதனால் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்விகளும் எழுகின்றன.

பெரியார் பெயரில் கொள்கை கோட்பாடுகளை வைத்து இயக்கம் நடத்தியதாகக் கூறும் பா.ம.க பெரியார் சிலையையே உடைக்கும் நிலைக்குப் போயிருக்கிறது. இதற்குக் காரணம் கூடா நட்பு தான். இந்த நிலை வேதனைக்குரியது.

பா.ஜ.க, முஸ்லிம்களை குறி வைத்து காய்களை நகர்த்தி வருகிறது. மற்ற மாநிலங்களில் அது எடுபடுகிறது. தமிழகத்தில் எடுபடவில்லை. அதனால் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து கூறுவது, பெரியார் சிலைகளை உடைக்கத் தூண்டி விடுவது போன்ற நடவடிக்கைகளில் சாதிய மதவாத சக்திகள், சங்பரிவார் அமைப்புகள் தொடர்ந்து ஈடுப்பட்டு வருவது வேதனையளிக்கிறது.

அதே திசையில் தான் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துகளும் அமைகிறது. தமிழகத்தில் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிராக திசைதிருப்புவது மதங்களுக்கு இடையே வன்முறையைத் தூண்டும் வகையில் அரசியல் களத்தில் காய்களை நகர்த்துவது ஆகியவை தமிழக நலன்களை பாதிக்கும்.

தி.மு.க-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வலுவாக இருப்பதால் தான் அரசியலுக்காக குறிவைத்து பா.ஜ.க, அ.தி.முக கூட்டணிக் கட்சியினர் பேசி வருகின்றனர்." எனத் தெரிவித்தார்.

Also Read: விரைவில் பெரியார் வாழ்க என ரஜினி கூறுவார் - திருமாவளவன் எம்.பி பேட்டி!