Politics

“தேர்தலை நடத்தினால் அ.தி.மு.கவினரால் கொள்ளையடிக்க முடியாது; எனவே நடத்தமாட்டார்கள்” - துரைமுருகன் பேட்டி!

உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார் தி.மு.க பொருளாளர் துரைமுருகன்.

அப்போது, “உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு அயோக்கியத்தனமானது. நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு இந்த அரசு நிச்சயம் தேர்தலை நடத்தாது.

இரண்டு கட்டங்களாக தேர்தலை அறிவித்திருப்பதை பார்த்தால், யாராவது நீதிமன்றத்தை நாடி தேர்தலை நிறுத்தமாட்டார்களா என்ற எண்ணத்திலேயே செயல்பட்டது போல உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது எனத் தெரிந்தே இன்று தேர்தல் தேதி தொடர்பாக அறிவிப்பாணை கொடுக்கப்பட்டுள்ளது.

கிராம பஞ்சாயத்து தேர்தலை கூட இரண்டு கட்டமாக நடத்துவதாக அறிவித்துள்ளார்கள். இது வாக்குப்பதிவின் போது வன்முறை மற்றும் ரவுடித்தனத்துக்கு வழிவகுக்கும்.

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தட்டும். அதனை சந்திக்கத் தயாராக உள்ளோம். தேர்தலைக் கண்டு அஞ்சும் கட்சி தி.மு.க அல்ல.

உள்ளாட்சி அமைப்பு மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அரசு கொள்ளையடித்து வருகிறது. தேர்தலை நடத்தினால் அவ்வாறு அவர்களால் கொள்ளையடிக்க முடியாது. ஆகையால் அ.தி.மு.கவினர் தேர்தலை நடத்தமாட்டார்கள்.

அ.தி.மு.க அரசு இன்று அறிவித்துள்ளதுதான் இறுதி முடிவு என்றால் நிச்சயம் நீதிமன்றத்தை நாடுவோம். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை வந்ததும் இது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

Also Read: ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் தேதி அறிவிப்பு : நகர்ப்பகுதிகளுக்கு எப்போது? - தொடரும் குழப்பம்!