Politics
''விமானங்களின் அறிவிப்புகளை மாநில மொழிகளிலேயே சொல்ல வேண்டும்''- மாநிலங்களவையில் வைகோ ஆவேசம்!
இந்திய விமானங்களின் அறிவிப்புகளை அந்தந்த மாநில மொழிகளிலேயே சொல்ல வேண்டும் என, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மாநிலங்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் ஆவேசமாக பேசிய வைகோ, ''இன்றைய காலகட்டத்தில், விமானங்களில் பறப்பது சொகுசுப் பயணம் அல்ல. இப்போது நேர சேமிப்பைக் கருதி நடுத்தர மக்கள், மாத ஊதியம் பெறுவோர், விவசாயிகள் விமானப் பயணங்கள் மேற்கொள்கின்றனர்.
கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் வேலைகளுக்காக வளைகுடா நாடுகளுக்கு விமானங்களில் செல்கின்றனர். நான் சிறுவனாக கிராமத்தில் இருந்தபோது, வானத்தில் விமானம் பறப்பதைப் பார்த்து, அதையும் ஒரு பறவை என்றே நினைத்தேன். இன்று விமானப் பயணம் சர்வ சாதாரணமாகிவிட்டது.
ஆனால் விமானப் பயணிகள் அறிந்துகொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விளக்கங்கள், இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே அறிவிக்கப்படுகின்றன. பயணிகளால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
கோலாலம்பூர் விமானத்தில் தமிழில் அறிவிப்பு கேட்டு மகிழ்ந்தேன். அதேபோல் சிங்கப்பூர் விமானத்தில், வளைகுடா நாடுகளின் விமானங்களில் தமிழில் அறிவிப்புச் செய்தபோது மகிழ்ச்சியால் சிலிர்த்தேன்.
அதுபோல இந்திய விமானங்களின் அறிவிப்புகளை அந்தந்த மாநில மொழிகளிலேயே சொல்ல வேண்டும். குறைந்தது மாநிலத்துக்கு உள்ளேயே பறக்கின்ற விமானங்களில் அந்தந்த மாநில மொழிகளிலேயே அறிவிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, சென்னையில் இருந்து தமிழ்நாட்டுக்கு உள்ளேயே திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி, சேலம் ஆகிய ஊர்களுக்குப் பறக்கின்ற விமானங்களில் அறிவிப்புகள் முதலில் தமிழில் சொல்லப்பட வேண்டும்.
அதே போல, பயணிகள் தங்கள் உடைமைகளை எந்த இடத்தில் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும், மாநில மொழிகளிலேயே அறிவிக்க வேண்டும்.
என்னுடைய இந்த வேண்டுகோளை, இந்த அவையின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரிப்பார்கள் என நம்புகின்றேன்'' எனத் தெரிவித்தார்.
பின்னர் சபாநாயகர் வெங்கய்ய நாயுடு, நாடாளுமன்றத் துறை அமைச்சரைப் பார்த்து, இந்த நியாயமான கோரிக்கையை விமான போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு உடனே தெரிவித்து செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
Also Read
-
தமிழ்நாடு எதற்கெல்லாம் போராடும்... ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி !
-
கரூருக்கு முன்னர் நாமக்கல்லில் ஏற்பட்ட பெரிய அசம்பாவிதம்- கள அனுபவத்தை விவரிக்கும் பேரா.பெருமாள்முருகன்!
-
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நாடகம்.. தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள்.. குவிந்த கண்டனம்.. கேரள அமைச்சர் அதிரடி!
-
முதுபெரும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
பதைபதைக்க வைக்கும் வீடியோ.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு!