Politics

“முரசொலி நிலம்: புகார் அளித்துவிட்டு ஆதாரமில்லாததால் வாய்தா கேட்ட பா.ஜ.க நிர்வாகி” - ஆர்.எஸ்.பாரதி சாடல்!

முரசொலி அலுவலக விவகாரத்தில் ஆதாரமில்லாததால் புகாரளித்த பா.ஜ.க நிர்வாகி சீனிவாசனே அவகாசம் கேட்டுள்ளார் என தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., விளக்கம் அளித்தார்.

முரசொலி அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த சர்ச்சை குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தகுந்த பதிலடிகளைக் கொடுத்து, ஆதாரம் சமர்ப்பிக்கத் தயாரா என எதிர்க்கட்சியினருக்கு சவால் விடுத்தனர்.

இந்நிலையில், பா.ஜ.க மாநில செயலாளர் சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இதுகுறித்துப் புகார் அளித்தார். பா.ஜ.க பிரமுகர் அளித்த புகாரின் பேரில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உடனடியாக முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் உத்தரவின்படி இன்று தி.மு.க அமைப்பு செயலாளரும், முரசொலி அறக்கட்டளை அறங்காவலருமான ஆர்.எஸ்.பாரதி, ஆஜராகி விளக்கம் அளித்தார்.

Also Read: “முரசொலி : வீண்களங்கத்திற்கு விளக்கம் தந்து பொய்யுரைப்போர் முகமூடியைக் கிழித்தெறிவோம்” - ஆர்.எஸ்.பாரதி

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி எம்.பி., “முரசொலி நிலம் தொடர்பான உரிய ஆவணங்களுடன் நாங்கள் ஆணையத்துக்கு வந்தோம். புகார் அளித்தவர் வரவில்லை; தலைமைச் செயலாளரும், புகார் அளித்தவரும் வாய்தா வாங்கியுள்ளனர். பொய்ப்புகார் அளித்தவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்படும்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசியல் வளர்ச்சி பிடிக்காமல் அவதூறு கிளப்புகின்றனர். முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இல்லை என்பதற்கான ஆதாரங்களை ஆணையத்தில் வழங்கியுள்ளோம். அரசால் இதை ஒரு மணி நேரத்தில் கண்டறிய முடியும்.” எனத் தெரிவித்தார்.

மேலும், “பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இருக்கும் வீடுகள், பா.ஜ.கவின் அலுவலகமான கமலாலயம் ஆகியவை பஞ்சமி நிலத்தில் இருப்பதாக யாராவது புகார் அளித்தால் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரிக்க முன்வருமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி.