Politics
பொது எதிரியை வீழ்த்தக் கைகோர்த்த கூட்டணி : 20 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிய வரலாறு!
அரசியலில் பொது எதிரியை எதிர்க்க கட்சி - கொள்கைகளை - கோட்பாடுகளை எதிர்த்து கூட்டணி அமைப்பது என்பது அரிதானது. 1989ல் நடந்தது போன்ற அரிய அரசியல் நிகழ்வு மீண்டும் தற்போது நடந்தேறியிருக்கிறது.
மராட்டியத்தில் அரசியல் சூழல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முக்கிய கட்டத்தை எட்டி இருக்கிறது. பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த சிவசேனா சரிசமமான அதிகாரப் பங்கீடு தர மறுக்கவே அரசியல் சூழலே மாறி இருக்கிறது.
1999ம் ஆண்டு சிவசேனாவை உருவாக்கிய பால் தாக்கரே ஒரு பேட்டியில் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணியமைக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு "அந்த போக்கிரி (Scoundrel) உடன் கூட்டணி வைக்க மாட்டோம்” என்று கடுமையாகச் சொல்லியிருந்தார். அதன் பின்னர் பா.ஜ.க-சிவசேனா கூட்டணியும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் பல தேர்தல்களில் தொடர்ந்து வந்தது.
2014 தேர்தல் வரை சிவசேனாவின் கையே மராட்டியத்தில் ஓங்கி இருந்திருக்கிறது. ஆனால் மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் கணக்குகள் மாறிவிட்டன. 20 ஆண்டுகளுக்கு முன்பு சிவசேனா தலைவர் யாரை போக்கிரி என்று சொன்னாரோ அதே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தயவு சிவசேனா கட்சிக்கு தற்போது தேவைப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான அதிகாரப் பகிர்வு மோதலால் சிவசேனா தனது கூட்டணி கணக்குகளை மாற்றத் திட்டமிட்டது. அதன் தொடர்ச்சியாக இந்துத்துவத்தை கொள்கையாகக் கொண்டு இயங்கும் பா.ஜ.க கூட்டணியில் இருந்து பிரிந்து, மதச்சார்பின்மையை முக்கிய கொள்கையாக கொண்டுள்ள காங்கிரஸ் கூட்டணியில் இணைந்திருக்கிறது.
உத்தவ் தாக்கரேவே காங். தலைவர் சோனியா காந்தியை நேரடியாகத் தொடர்புகொண்டு ஆதரவு கேட்டிருக்கிறார். சிவசேனா அரசியல் ரீதியாக ஆதாயமடைவதற்காகவே இந்த முயற்சிகளை மேற்கொண்டாலும் கூட பொது எதிரியான பா.ஜ.க-வை எதிர்க்க இந்தக் கூட்டணியை பலரும் ஆதரித்து வருகிறார்கள்.
இதே மாதிரியான ஒரு அரசியல் நிகழ்வு 1989ம் ஆண்டு தேசிய அரசியலில் நிகழ்ந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து வி.பி.சிங் வெளியேறி, தேசிய முன்னணி என்ற பெயருடன் தேர்தலைச் சந்தித்தார். தேர்தல் முடிவுகளில் போதுமான இடங்கள் கிடைக்காததால் அப்போதைய பொது எதிரியான காங்கிரஸ் கட்சியை எதிர்க்க வி.பி.சிங் அரசுக்கு பா.ஜ.க உள்ளிருந்தும், இடதுசாரிகள் வெளியிலிருந்தும் ஆதரவு அளித்தது குறிப்பிடதக்கது. அதைப் போன்றதொரு வரலாறே தற்போது திரும்பியிருக்கிறது.
- சி.ஜீவா பாரதி
Also Read
-
“‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000! : நாளை (ஜன.8) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!