Politics

“இடைத்தேர்தலுக்காக பொய்யான வாக்குறுதிகளை வாரியிறைக்க வேண்டாம்” - எடப்பாடிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்!

தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பாக அவதூறாகப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது,

“நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் பிரசாரம் செய்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு நீர்ப்பாசனத் திட்டம் குறித்து ஆதாரமற்ற அவதூறான கருத்துகளை கூறியிருந்தார். இத்திட்டத்தை பொறுத்தவரை கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது 2009ம் ஆண்டு பட்ஜெட் அறிக்கையில் ரூ.369 கோடி ஒதுக்கப்பட்டு தீவிரமாக திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

இதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம், உடன்குடி, சாத்தான்குளம், திருச்செந்தூர் ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த 50 ஆயிரல் ஹெக்டேர் நிலம் நீர்ப்பாசனம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனால் உப்பு நீராகியுள்ள நீராதாரங்கள் பயன்படுத்துகிற நீராக மாறும். தாமிரபரணி ஆற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கிற 14 டிஎம்சி நீரை தடுத்து நிறுத்தி, இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பயன் தருகிற வகையில் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இத்திட்டம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளில் ரூ.214 கோடி செலவிடப்பட்டு திட்டத்தின் பாதி வேலைகள் முடிந்துவிட்டன. இந்நிலையில், 2011ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதா இத்திட்டத்தை கிடப்பில் போடுகிற முடிவை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எடுத்தார். கலைஞர் ஆட்சியில் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முடக்குவது என்பது ஜெயலலிதாவின் கொள்கையாகவே இருந்தது. எனவே இதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சார்பாக அந்தப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மு.அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் 2016ம் ஆண்டுக்குள் இத்திட்டத்தை முடித்துவிடுவோம் என உறுதிமொழி கூறியது. ஆனால் உறுதிமொழியின்படி எந்த வேலையும் தொடங்கப்படவில்லை.

மீண்டும் 2017ல் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அப்போது தமிழக அரசு இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று காரணம் கூறியது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தமிழக அரசு மீது தெரிவித்து இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று ஆணை பிறப்பித்தது.

நாங்குநேரி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினராக இருந்த எச்.வசந்த்குமார் இத்திட்டத்தை அவசியம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திப் பேசினார். அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் தமிழக அரசு வெறும் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக அறிவித்தது. இதன்படி, எந்தவிதமான முறையான திட்ட மதிப்பீடும், ஆய்வும் செய்யாமல் டெண்டர் விடப்பட்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவான 12 ஒப்பந்ததாரர்களுக்கு வேலை வழங்கப்பட்டது, இதனால் ஒப்பந்ததாரர்கள் பயன் அடைந்தார்களே தவிர இணைப்பு கால்வாய் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மொத்தம் நான்கு கட்டப்பணிகளில் இரண்டு கட்டங்கள் தி.மு.க ஆட்சியில் முடிக்கப்பட்டது. ஆனால் மீதிப் பணிகள் 2011க்கு பிறகு நடைபெறவில்லை. தற்போது மீண்டும் நீதிமன்றத்தில் இத்திட்டம் குறித்து முறையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டம் 2020ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி மக்களை ஏமாற்றுவதற்காக பொய்யான வாக்குறுதியை வழங்கியிருக்கிறார். அத்துடன் இல்லாமல், தி.மு.க ஆட்சியில் நிலம் கையகப்படுத்தாமலேயே திட்டம் அறிவிக்கப்பட்டதாக உண்மைக்குப் புறம்பான தகவலை கூறியிருக்கிறார்.

ஆனால் திட்ட அறிவிப்பு வந்தவுடனேயே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 694 ஹெக்டேர் நிலங்களும், தூத்துக்குடியில் உள்ள 106 ஹெக்டேர் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நிலம் கையகப்படுத்தாமல் திட்டத்தின் பாதி பணிகள் நிறைவு பெற்றிருக்காது என்பதை ஒரு முதலமைச்சர் அறியாமல் இருப்பது மிகுந்த வியப்புக்குரியது, ஒரு முதலமைச்சராக இருப்பவர் கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்து முடிந்த வேலைகளை நடக்கவில்லை என்று கூறுவதைவிட முறையற்ற செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. இத்திட்டப் பணிகள் 2009ல் தொடங்கப்பட்டு 2011 அரை 50% பணிகள் முடிக்கப்பட்டது. ஆனால், 2011ல் அ.தி.மு.க ஆட்சி வந்த பிறகு கடந்த 8 ஆண்டுகளாக இந்த நீர்ப்பாசன திட்டத்திற்காக அதிமுக அரசு எடுத்த முயற்சிகள் என்ன?

தி.மு.க ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டதனாலேயே அந்த திட்டத்தை நிறைவேற்றாமல் முடக்கவேண்டும் என்று அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அரசியல் உள்நோக்கத்தோடு கருதியதால் தான் இத்திட்டம் முடக்கப்பட்டது என்பதை எடப்பாடி பழனிசாமியால் மறுக்க முடியுமா? நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அதற்குப் பிறகும் பணிகள் தொடங்கப்படாத நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்ட காரணத்தினால் தான் இப்பணியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தமான சூழல் ஏற்பட்டது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

இந்த நீர்ப்பாசன திட்டத்தை நிறைவேற்றுவதில் இப்பகுதிகளுக்கு குறிப்பாக நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு அ.திமு.க அரசு செய்த துரோகத்திற்கு உரிய பாடத்தை வாக்காளப் பெருமக்கள் வருகிற தேர்தல் நாள் அன்று நிச்சயம் வாக்குகள் மூலம் வெளிப்படுத்துவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

எடப்பாடி பழனிசாமி அரசின் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைக்கு உரிய பாடத்தை புகட்டுவதற்கு கிடைத்திருக்கிற அரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அ.தி.மு.க வேட்பாளரை தோற்கடிக்க வேண்டுமென வாக்காளப் பெருமக்களை கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.