Politics

தமிழகத்தில் போதி தர்மருக்கு சிலை அமைக்க வேண்டும் - விஷ்ணு பிரசாத் எம்.பி வலியுறுத்தல்!

சென்னை மயிலாப்பூரில் காங்கிரஸ் கட்சி செயல் தலைவரும் ஆரணி மக்களவை உறுப்பினருமான விஷ்ணு பிரசாத் எம்.பி தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "சீனா பிரதமர் இந்தியா வருகை மற்றும் பிரதமர் மோடியுடனான சந்திப்பு முக்கிய சந்திப்பாக உலக நாடுகள் மத்தியில் பார்க்கப்படுகிறது. கி.பி.5 ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் பல்லவ வம்சத்தில் பிறந்தவர் போதி தர்மர். உழைப்பு,சுறுசுறுப்பு போன்ற தத்துவங்களை சீனாவுக்கு போதித்தது போதி தர்மர். இந்த கருத்துக்களை பின்பற்றி தான் சீனா வளர்ந்து வருகிறது.

தமிழ்நாட்டில் இருந்து சென்றவர் சீனாவில் புகழ்பெற்று, பின் அம்மக்கள் அவரை பின்பற்றி வருகிறார்கள். நமது பெருமையை நாம் உணர்ந்து வல்லபாய் படேலுக்கு குஜராத்தில் சிலை அமைத்தது போல, தமிழகத்தில் போதி தர்மருக்கு சிலை அமைக்க வேண்டும். இது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.

மேலும், போதி தர்மர் குறித்த ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என மத்திய அரசிற்கு கோரிக்கை வைப்பதாகவும் தெரிவித்தார். தற்காப்பு கலையில் சிறந்தவர்,அரிய மருத்துவத்தையும் கண்டுபிடித்த போதி தர்மரின் புகழை நாம் மறந்து விட்டோம்'' எனத் தெரிவித்தார்.

மேலும், நாங்குநேரி,விக்ரவாண்டி தொகுதியில் காங்கிரஸ், தி.மு.க வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என தெரிவித்தார். சீனா பிரதமர் வருகைக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டியது இந்திய அரசின் கடமை. அதே நேரத்தில் மாமல்லபுரத்தில் உள்ள மீனவர்கள் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.