Politics
“மாற்றுக்கட்சினர் கூட வந்தார்கள்... ஆனால்” : இ.பி.எஸ், ஓ.பி.எஸ் மீது சி.வி.சண்முகம் தரப்பு அதிருப்தி!
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரி மகன், லோகேஷ் குமார். வயது 26. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் விக்கிரவாண்டியில் நடந்த சாலை விபத்தொன்றில் சி.வி.சண்முகத்தின் சகோதரி வள்ளி இறந்ததால், லோகேஷ் குமார் சி.வி.சண்முகம் வீட்டில் வளர்ந்து வந்தார்.
லோகேஷ்குமார் அமைச்சரின் செல்லப்பிள்ளையாக அவரது வீட்டில் வளர்ந்து வந்த நிலையில், கடந்த 6ம் தேதி திடீரென தற்கொலை செய்துகொண்டார். இந்த நிகழ்வு சி.வி.சண்முகத்தை கலங்கச் செய்துள்ளது.
ஆறு மாதங்களுக்கு முன்னர், ஊடகத்துறை தொடர்பான மேற்படிப்பிற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார் லோகேஷ் குமார். சில நாட்களுக்கு முன்தான் அங்கிருந்து, திண்டிவனம் வந்தவர் சில நாட்களாகவே சோகமயமாகக் காட்சியளித்துள்ளார்.
இதுகுறித்து, அவரது மாமா சி.வி.சண்முகம் கேட்டதற்கும் பிடிகொடுத்துப் பேசவில்லை எனக் கூறப்படுகிறது. சி.வி.சண்முகம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த லோகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மகன் போல பார்த்துக்கொண்ட மருமகன் தற்கொலை செய்துகொண்டது சி.வி.சண்முகத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லோகேஷ் குமார் உடலுக்கு தமிழக அமைச்சர்கள் தங்கமணி, பாண்டியராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடி, தி.மு.க எம்.பி., ஜெகத்ரட்சகன், தி.மு.க மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.
ஆனால், அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர்களான எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அஞ்சலி செலுத்த வராதது அப்பகுதி அ.தி.மு.க-வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் அன்றைய தினம் சொல்லிக்கொள்ளும்படியான நிகழ்ச்சிகள் எதுவுமின்றி சென்னையில் தான் இருந்தார்கள். அவர்களில் யாராவது வரக் கூடும் என இறுதிச்சடங்கு மாலை வரை தள்ளிவைக்கப்பட்டது.
அப்படியும், இருவரில் ஒருவர் கூட கலந்துகொள்ளாதது சி.வி.சண்முகம் தரப்பை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அமைச்சர் வீட்டு துக்க நிகழ்வில் கூட முதல்வரும், துணை முதல்வரும் கலந்துகொள்ளாதது மக்கள் மத்தியிலும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
Also Read
-
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்... விடுபட்ட மகளிர் விண்ணப்பிக்கலாம்: சென்னை மாநகராட்சியின் அறிவிப்பு என்ன ?
-
பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி... தமிழ்நாடு அரசின் அசத்தல் அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
‘சமூகநீதி விடுதிகள்’ : முதலமைச்சரின் அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் வரவேற்பு!
-
சமூகநீதி விடுதிகள் : "முதலமைச்சரின் சிறந்த சமூக நீதி சமத்துவ சிந்தனை இது" - கே.பாலகிருஷ்ணன் பாராட்டு !
-
4 மணி நேரம் - 10 துறைகள் குறித்து ஆய்வு : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியது என்ன?