Politics

அப்பல்லோ முதல் அறிக்கை வெளியிட்டு 3 வருடமாச்சு.. ‘ஜெயலலிதா மரண மர்மம்’ குறித்த ஆறுமுகசாமி அறிக்கை எங்கே ?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி இரவு திடீரென உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அடுத்த நாளான செப்டம்பர் 23ம் தேதியன்று, “மாண்புமிகு முதல்வர் காய்ச்சல் மற்றும் நீரிழப்புக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இந்த அறிக்கை வெளியிடப்பட்டு இன்றோடு 3 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ஆனால், ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்கள் இன்னும் விலகியபாடில்லை.

2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி முதல் 75 நாட்களாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு லண்டன் மருத்துவ நிபுணர் பீலே உள்ளிட்ட சிறப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும், டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மரணமடைந்ததாக அறிக்கை வெளியிடப்பட்டது. 6ம் தேதியன்று அவசரம் அவசரமாக அடக்கம் செய்யப்பட்டார் ஜெயலலிதா. அதைத்தொடர்ந்து, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் சந்தேகங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அரசியலிலும் அ.தி.மு.க-விலும் ஆட்சிகளும், காட்சிகளும் மாறின. ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் புரிந்தார், பின்னர் கழகத்தோடு இணைந்தார்; எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்; சசிகலா சிறைக்குச் சென்றார்; தினகரன் தனிக்கட்சி தொடங்கினார்.

மூன்றாண்டுகளில் ஏகப்பட்ட மாற்றங்கள். இப்போது அ.தி.மு.க டெல்லியைத் தலைமையாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க அமைச்சர்கள் பா.ஜ.க தலைவர்களுக்கு சேவகம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த 3 ஆண்டுகளில் அப்பல்லோ நிர்வாகம் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சைக் கட்டணமாகவும், சாப்பட்டுக் கட்டணமாகவும் 6.86 கோடி ரூபாய் பில் போடப்பட்டது உட்பட.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை நியமித்தது தமிழக அரசு. 2017ம் ஆண்டு முதல் விசாரணை செய்து வரும் இந்த ஆணையத்திற்கு இதுவரை பல முறைகள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 ஆண்டுகள் முடிவடைந்திருக்கும் நிலையில் மர்ம முடிச்சுகள் தொடர்கின்றன. ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை அறிக்கையை வெளியிடுமா? இல்லை மர்மங்களை மறைத்து ஆட்சியாளர்களைக் காப்பாற்றுமா? என்பது தான் தமிழக மக்களின் கேள்வி.