Politics

நீதிபதி தஹில்ரமாணி இடமாற்றம் செய்யப்பட்டது பா.ஜ.க.வின் பழிவாங்கும் செயல் - திருமாவளவன்

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "பா.ஜ.க அரசின் 100 நாள் ஆட்சி வேதனை அளிக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயல் தான் நடைபெற்று வருகிறது. குறிப்பாக முத்தலாக் தடை சட்டம், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்தல் உள்ளிட்டவை அதற்கு சான்றாகும்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தஹில்ரமாணி மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதற்கு பா.ஜ.க-வின் பழிவாங்கும் செயலை எடுத்துக்காட்டுகிறது. குஜராத் நீதிபதியாக இருந்தபோது பா.ஜ.க.வுக்கு எதிராக செயல்பட்டதால் இதுபோன்ற பழிவாங்கும் செயலில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை குறித்து அற்புதம்மாளை அழைத்துக்கொண்டு அமித்ஷாவிடம் சென்று முறையிட்டோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சி.பி.எஸ்.இ. பாட புத்தகத்தில் சாதி மதம் குறித்த பாடத்திட்டத்தை நீக்க வேண்டும். அதில் அம்பேத்கரை தலித் தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளதை கண்டிக்கிறோம்.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசைக் கண்டித்து இன்று சென்னையில் நடக்க இருந்த போராட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டம் வருகிற 12ம் தேதி திட்டமிட்டபடி நடத்தப்படும்'' எனத் தெரிவித்தார்.