Politics

“முக்கிய தலைவர்களை கைது செய்தால் காங்கிரஸ் சிதறிவிடுமா?” - பீட்டர் அல்போன்ஸ் ஆவேசம்!

சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாரதிய ஜனதா கட்சியின் பொருளாதார சீர்கேட்டை கண்டித்தும், மத்திய அரசின் பழி வாங்கும் முயற்சியாக ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அயனாவரத்தில் நடைபெற்ற இந்த கண்டன கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், நளினி சிதம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கண்டன உரை ஆற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது, “நாட்டில் சில விஷயங்கள் நமக்குத் தெரியவில்லை என்றால் பரவாயில்லை, நீதிபதிக்கே விளங்கவில்லை. ப.சிதம்பரம் சிறைச் சாலையிலேயே இருந்துவிடுவார் என்று பலர் என்னுகின்றனர்; ஆனால் அப்படி அல்ல.

சிறையில் இருந்து வரும் தலைவர்கள் தான் தங்களை இன்னும் தகுதிப்படுத்திக்கொண்டு வருகின்றனர். சிறையில் இருந்து வந்த தலைவர்கள் தான் பின் நாளில் மக்கள் போற்றும் தலைவர்களாக வந்தனர்.

காங்கிரஸ் கட்சி இல்லமால் ஒரு பாரதத்தை உருவாக்க வேண்டும் என்றார் அமித்ஷா. அதற்கான ஒரு அங்கம் தான் ப.சிதம்பரம் கைது நடவடிக்கை. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை கைது செய்துவிட்டால் காங்கிரஸ் கட்சியினர் சிதறி ஓடிவிடுவார்கள் என்று எண்ணுகின்றனர். ஆனால், நாங்கள் இது போன்ற சூழல் வரும்போது தான் ஒன்றுபட்டுத் திரளுவோம்.

சிறு வியாபாரிகளைக் கேட்டுப் பார்த்தால் கூட தெரியும் இன்றைய பொருளாதார சூழல். ஏறக்குறைய ஒரு நாளுக்கு நம் நாட்டில் 2.5 லட்சம் பேர் வேலையிழந்து வருகின்றனர். சந்திரயானுக்கு அடித்தளம் போட்டதே காங்கிரஸ் கட்சி தான். ஆனால் மோடி வந்து ரிப்பன் வெட்டுகிறார்.” எனப் பேசினார்.