Politics

“தோல்வியை மறைக்க சாதி, மத அரசியலை முன்னெடுக்கும் பா.ஜ.க-வினர்” - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று இராமநாதபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “மரபுகளுக்கு மாறாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி மாற்றப்பட்டதால் அவர் ராஜினாமா செய்துள்ளார். தன்னாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அதிகாரிகள், நீதிபதிகள் என பலரும் பதவி விலகி வருவது வருத்தத்திற்குரியது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருவது ஜனநாயகத்திற்கு எதிரானது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் 10 அமைச்சர்கள் ஒரே நேரத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்வது நல்ல முன் மாதிரி அல்ல. தமிழ்நாட்டில் நிர்வாகம் என்ற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஒரு ஆதாரம் கூட இல்லை. அவரது கைதுக்கு காங்கிரஸ் கட்சியின் அனைத்து தலைவர்களும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

மத்திய பா.ஜ.க அரசு பதவியேற்று கடந்த 100 நாட்களில் பரிதாபகரமான தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆட்டோமொபைல் துறையில் பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்பு 3 ஆண்டுகளுக்குப் பின்பு இப்போது கடுமையாக எதிரொலித்துள்ளது.

காங்கிரஸ் காலத்தில் 9 சதவிகிதமாக இருந்த வளர்ச்சி விகிதம் தற்போது 5 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதை மறைக்க பா.ஜ.க-வினர் சாதி, மத அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.” எனத் தெரிவித்தார்.