Politics

ஜி.எஸ்.டி வரியால் சிறு,குறு தொழில்கள் அழிந்துள்ளது : பா.ஜ.கவை விமர்சித்த பிரேமலதா - கூட்டணிக்குள் பிளவு ?

இரண்டாவது முறையாக மத்திய அரசில் பா.ஜ.க பதவியேற்றதில் இருந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிவையே சந்தித்து வருகிறது. அரசுத்துறை நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்து வரும் வேளையில், பொருளாதார அறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பொதுத்துறை நிறுவனங்களை அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதையே நித்தமும் செய்துவரும் மோடி அரசு, பொருளாதாரத்தை மேம்படுத்துவதையோ அல்லது ஏற்கனவே இருந்த பொருளாதார நிலையைத் தக்கவைக்காமல் கோட்டைவிட்டு வருகிறது.

பா.ஜ.க அரசு மேற்கொண்ட ஜி.எஸ்.டி, பணமதிப்பு நீக்கம் போன்ற தவறான பொருளாதார கொள்கைகளின் விளைவே இந்த பொருளாதார மந்த நிலை என நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி (GDP) 5.8-ல் இருந்து 5% ஆக சரிந்துள்ளது.

இதனால் சிறு, குறு தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகிவருவது தெளிவாகிறது. ஆனால், மோடி தலைமையிலான மத்திய அரசோ, அதன் கைப்பாவையாக உள்ள மாநில அரசோ பொருளாதார நெருக்கடி என்ற நிலை நாட்டில் ஏற்படவே இல்லை என்று பாசாங்கு காட்டி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க-வுடன் கூட்டணியில் உள்ள தே.மு.தி.க தற்போது நிலவும் பொருளாதாரச் சரிவு குறித்து விமர்சித்துள்ளது. இது தொடர்பாக திருப்பூரில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ”மத்திய அரசின் ஜி.எஸ்.டி திட்டத்தால் லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்கள் அழிவை சந்திக்கும் நிலையே உருவாகியுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்திருக்கும் நிலை வேதனையையே ஏற்படுத்துகிறது.” என பா.ஜ.க-வின் கூட்டணியில் உள்ள பிரேமலதா, சாடும் விதமாக பேசியுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத்தில் 2% வாக்குகளை மட்டும் பெற்றதால் தே.மு.தி.க மாநில அந்தஸ்துள்ள கட்சி என்ற பெயரை இழந்தது. இதற்கு கூட்டணியில் உள்ள அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் எந்த உதவிக்கரமும் நீட்டாததால் அதிருப்தி மற்றும் கோபத்தின் உச்சிக்கே சென்ற பிரேமலதா இவ்வாறு மோடி அரசை விமர்சிக்கும் வகையில் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.