Politics

“அழிக்கப்படும் ஜனநாயகத்தைக் காக்க நீதிமன்றமே முன்வராதது வேதனைக்குரியது” : மம்தா பானர்ஜி கண்டனம்!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமின் அளிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால் நேற்று இரவு டெல்லியில் ப.சிதம்பரம் வீட்டின் சுவர் ஏறிக் குதித்து அவரை சிபிஐ கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக ப.சிதம்பரத்தை மோடி அரசு கைது செய்திருப்பதாகவும், சிபிஐ, அமலாக்கத்துறையை ஏவி தங்களது வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்வதாகவும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ப.சிதம்பரத்தை கைது செய்தது மிகுந்த வேதனையை அளிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

ப.சிதம்பரம் முன்னாள் மத்திய அமைச்சர் மட்டுமல்லாமல் பொருளாதார நிபுணர் ஆவார். அவரை சிபிஐ கைது செய்திருப்பது முறையற்ற செயல் எனச் சாடிய மம்தா, ஜனநாயகம் ஒழிக்கப்பட்டு வரும் நிலையில் அதனைக் காக்க நீதிமன்றமே முன்வராதது வேதனைக்குரிய செயலாக உள்ளது எனவும் பேசியுள்ளார்.