Politics

மதச்சார்பற்ற கொள்கைகளை சோனியா காந்தி தலைமையில் வென்றெடுப்போம் - கே.எஸ்.அழகிரி

சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''மீண்டும் சோனியா காந்தி காங்கிரஸ் தற்காலிக தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். செயற்குழு தலைவர்கள், செயல் தலைவர்கள், மாநில தலைவர்கள் ஒன்றுகூடி சோனியாவே தலைமை ஏற்க வேண்டுமென விரும்பியதால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சோனியாவைத் தேர்ந்தெடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தற்காலிகத் தலைமையாக சோனியா செயல்படுவார்.

இந்தியாவில் அரசியல் வேறுபாடுகள் என்பதைத் தாண்டி கொள்கை ரீதியான வேறுபாடுகள் உள்ள நிலையில் சோனியாவின் தலைமை நம்பிக்கை,மகிழ்ச்சி அளிக்கிறது. சமதர்ம ,பொதுவுடைமை,மதச்சார்பற்ற கொள்கைகளை சோனியா காந்தி தலைமையில் வென்றெடுப்போம்'' எனத் தெரிவித்தார்.

பின்னர் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், ''ராகுல் தலைவராகத் தொடர வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பம். பலமுறை வற்புறுத்தியும் ராகுல் அதை ஏற்கவில்லை. சோனியா காந்தி தலைவராகப் பொறுப்பேற்றதை வரவேற்கிறேன்.இது தற்காலிகமான ஏற்பாடுதான். மீண்டும் ராகுலே தலைவராக வருவார்.அவர் தலைவராக வர வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும். ராகுல் தலைவர் பொறுப்பு ஏற்கும்வரை சோனியா தலைவராக நீடிப்பார்'' எனத் தெரிவித்தார்.