Politics

“காஷ்மீர் மக்களின் மனதில் தீயை பற்ற வைத்துவிட்டீர்கள்” - நாடாளுமன்றத்தை அலறவிட்ட வைகோ... பதறிய அமித்ஷா

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டத்தை எதிர்த்து, மாநிலங்களவையில் வைகோ கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். இந்த மசோதா ஒரு ஜனநாயக படுகொலை என அவர் பேசிய உரை நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலங்களவையில் எம்.பி.,க்கள் காஷ்மீர் மசோதா குறித்து பேச நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது வைகோ தனக்கு பேச வாய்ப்பளிக்குமாறு தொடர்ந்து குரல் கொடுத்தார். இதனால், அவையில் சிறிது அமளி ஏற்பட்டது.

இதனையடுத்து வைகோ பேசுகையில், “ ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனித்துவத்துக்கும், அடையாளத்துக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று நேரு உறுதியளித்ததை அடுத்து தான் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அதற்காகவே சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 மற்றும் 35ஏ சட்டங்கள் அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டன.

அதன்பிறகு காஷ்மீர் விவகாரத்தில், கொடுத்த வாக்குறுதியை பின்பற்றவில்லை காங்கிரஸ். ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் ஆட்சி திடீரென கலைக்கப்பட்டது. பலமுறை காஷ்மீரில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. தொடர்ந்து ஜனநாயக படுகொலையை செய்து வந்தது காங்கிரஸ்.

இன்று பா.ஜ.க, காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக பிரித்தது மட்டுமல்லாமல், அடிப்படை உடன்படிக்கையையே மீறியிருக்கிறது. புதுச்சேரி, மாநில அந்தஸ்து கோரி வரும் நிலையில், நீங்கள் காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றியிருக்கிறீர்கள். காஷ்மீர் மாநிலத்தின் அனைத்து உரிமைகளையும் பறித்துள்ளீர்கள். இந்த நிலை ஏற்பட காங்கிரசும் ஒரு காரணம்.

கடந்த சில நாட்களாக காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டது எனக்கு மிகுந்த கவலையளித்தது. மத்திய அரசின் இந்த முடிவால், காஷ்மீர் ஒரு தெற்கு சூடானாக, கிழக்கு தைமூராக, கொசாவோவாக மாறும். இது நிச்சயம் நடக்கும். நான் எச்சரிக்கிறேன். இந்த விவகாரம் சர்வதேச பிரச்னையாக உருவாக்கப்படும். அமெரிக்கா இந்த விவகாரத்தில் தலையிடும்.

எதிர்காலத்தை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன். ரத்தக் கண்ணீர் வடிக்கிறேன். அவையில் அரசியலமைப்பு பிரதிகளை கிழித்த எறிந்த உறுப்பினரை, சபாநாயகர் வெளியேற்றினார். ஆனால், கொதித்துக் கொண்டிருக்கும் காஷ்மீர் இளைஞர்களை தூக்கி எறிய முடியுமா?

காஷ்மீர் மக்களின் மனதில் தீ புகைந்து கொண்டிருக்கிறது. அதை பற்ற வைக்கும், தீப்பொறிதான் இந்த மசோதா. இந்த நாள் ஒரு அவமானகரமான நாள். ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு விட்டது” என்று ஆக்ரோஷமாக தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

வைகோவின் ஆவேச உரை மாநிலங்களவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் பெரும் பதட்டத்தில் அமர்ந்திருந்தனர்.