Politics

காஷ்மீர் பிரச்னைக்கு இது ஒன்று தான் தீர்வு : அன்றே சொன்ன தந்தை பெரியார் !

1947ஆம் ஆண்டு, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, ஜம்மு காஷ்மீர் சில நிபந்தனைகளுடன் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அப்போது இந்திய அரசமைப்பு சட்டத்தில், பிரிவு 370 இயற்றப்பட்டு, அதன் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ நீக்கப்படும் என மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இதனையடுத்து சட்டம் நீக்கப்படுவதற்கான அறிவிப்பு இப்போது முதலே அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து மத்திய அரசின் இந்த அறிவிப்பு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது காஷ்மீரில் வாழும் மக்களுக்கு பெரும் அநீதியை விளைவிக்கும் என்றும், ஏற்கனவே பதற்றம் அதிகமாக இருக்கும் காஷ்மீர் மண்ணில் அதிக வன்முறை நிகழும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், காஷ்மீர் மக்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டு, கார்ப்ரேட்டுகள் களம் புகும் மாநிலமாக மாற்றப்படும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த காஷ்மீர் பிரச்சனைக்கு தந்தை பெரியார் அன்றே தீர்வு கூறியுள்ளார். “ காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசுவதற்கு நாம் யார், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அந்த உரிமை இல்லை.

காஷ்மீரிகளுக்கே அதை தீர்மானிப்பதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளன. அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க நாம் அவர்களை அனுமதிக்க வேண்டும். காஷ்மீரின் இந்திய ஆக்கிரமிப்பு திரும்பப் பெறப்பட வேண்டும். காஷ்மீரின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு திரும்பப் பெறப்பட வேண்டும். இது மட்டுமே காஷ்மீரிகளுக்கு நீதி வழங்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இன்று காஷ்மீர் மக்களின் உரிமைகளை பறிக்கும் விதமாக பா.ஜ.க இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் ஒரே கலாச்சாரம், ஒரே மொழியை புகுத்தி அகண்ட பாரதமாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை பா.ஜ.க செயல்படுத்த தயாராகிவிட்டது என்பது இதில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.