Politics

அரசியலில் போராடும் வலிமை எனக்கு இல்லை; என்னை நிம்மதியாக வாழ விடுங்கள் - குமாரசாமி அதிருப்தி பேச்சு

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து மதசார்பற்ற ஜனதா தளம் கடந்த ஒரு வருடமாக ஆட்சி அமைத்து வந்த நிலையில் அண்மையில் கவிழ்ந்தது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து குமாரசாமி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு பா.ஜ.கவின் எடியூரப்பா கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்த நிலையில் தீவிர அரசியலில் இருந்து தான் விலகப் போவதாக குமாரசாமி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “நான் அரசியலுக்கு வந்ததும், முதலமைச்சர் ஆனதும் ஒரு விபத்துதான் என்றும், முதலமைச்சராக இருந்த போது சிறப்பான ஆட்சியை அளித்திருப்பதாக நம்புகிறேன்” என்றும் தெரிவித்தார்.

மேலும், தனது தந்தை தேவகவுடா இன்றளவும் அரசியலோடு போராடி வருகிறார். ஆனால் அதற்கான வலிமை என்னிடம் இல்லை. தற்போது இருக்கும் அரசியல் சூழலில் என்னால் நீடிக்க முடியும் என தெரியவில்லை.

இன்றைய காலகட்டத்தில் உள்ள அரசியல் மக்களுக்கானதாக இல்லை. பழிவாங்குவதற்காகவும், சம்பாதிப்பதற்காகவும் தான் உள்ளது. எனவே இவற்றில் இருந்து விலக இருக்க விரும்புகிறேன்

என்னை நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழ விடுங்கள் போதும். அதிகாரப்பதவி ஏதும் வேண்டாம். மக்கள் மனதில் நீங்க இடம் கிடைத்தாலே போதும் என குமார்சாமி கூறியுள்ளார்.