Politics
காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி நிலைக்குமா என தெரியவில்லை : கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி அதிருப்தி !
கர்நாடக சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தார் குமாரசாமி. இதையடுத்து ஆளுநரை சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில், காபந்து முதல்வராக அவர் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜினாமா செய்தபிறகு அனைத்துத் துறை அரசு செயலாளர்களையும் சந்தித்துப் பேசினார் குமாரசாமி. கர்நாடக மக்களுக்காக பணியாற்றிய கூட்டணி அரசின் பங்களிப்பு திருப்திகரமாக இருந்ததாகவும், 14 மாதங்கள் சிறப்பாக செயல்பட ஒத்துழைப்பு நல்கிய அரசு அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தார் முதலமைச்சர் குமாரசாமி.
மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக கர்நாடக கூட்டணி அரசு செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக கடன் நிவாரண சட்டம் கர்நாடக மக்களுக்கு அரசு வழங்கிய மிகப்பெரிய பரிசு என்று குறிப்பிட்டார்.
இந்தத் திட்டம் தொடங்கியதில் இருந்து 90 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் எனவும் குமாரசாமி தெரிவித்தார். கடன் நிவாரண சட்டம் மூலம் ஏழை மக்களும், சிறு விவசாயிகளும் பயன்பெறுவார்கள். மேலும், இத்திட்டத்திற்கு அனுமதியளித்த குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவித்தார்.
இதனையடுத்து குமாரசாமியிடம் காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணி எதிர்காலத்தில் தொடருமா எனக் கேள்வி எழுப்பியதற்கு, கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சியினர் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.
முன்னதாக பெங்களூருவில் உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சி எம்.எல்.ஏக்களை அழைத்து எதிர்கால செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றார் குமாரசாமி. மேலும், ம.ஜ.தவை வலிமைப்படுத்துவதே தங்களது குறிக்கோள் என்றும், அதன் மூலம் மக்களிடம் இழந்த நம்பிக்கையைப் பெறுவோம் என்றும் தெரிவித்தார்.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!