Politics

கர்நாடகாவில் ஆட்சியமைக்க நாளை உரிமை கோருகிறார் எடியூரப்பா!

கர்நாடகாவில் ஆளும் கூட்டணி அரசு மீதான அதிருப்தியால் காங்கிரஸ் மற்றும் மஜதவைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் அம்மாநில அரசியலில் பெரும் குழப்பமும், பதற்றமும் நிலவி வருகிறது.

இந்த நிலையில், பல்வேறு சட்டப்போராட்டங்களுக்கு மத்தியில் கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணி அரசு 99 வாக்குகளையும், பா.ஜ.க 105 வாக்குகளையும் பெற்றது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமி தவறியதால் கர்நாடகாவில் காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து, ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் குமாரசாமி.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்காக நாளை பிற்பகல் 3.30 மணியளவில் ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து எடியூரப்பா உரிமை கோருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடியூரப்பாவின் கோரிக்கைக்கு ஆளுநர் சம்மதித்தால் கர்நாடகாவின் முதலமைச்சராக அவர் 4வது முறையாகப் பதவியேற்பார்.