Politics
தமிழகத்திற்கு பா.ஜ.க கொண்டு வரும் மோசமான திட்டங்களை தடுக்க மக்கள் ஒன்று சேர வேண்டும்:வைகோ
மதிமுக பொதுசெயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என தலைமை நீதிபதி அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதே வேளையில், உலகிலேயே பழமையான, செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் மொழி பட்டியலில் இடம்பெறாதது வேதனையை அளிப்பதாக வைகோ தெரிவித்தார்.
தென்னிந்திய மொழிகளான கன்னடம், தெலுங்கும் இடம்பெற்றிருக்கும் போது, தமிழ் மொழியும் தேவையான ஒன்று என பேசிய அவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்திற்கு இதனை கொண்டு செல்ல மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் மிகப்பெரிய ஏமாற்று வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அத்திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என சட்டப்பேரவையில் அமைச்சர் கூறியுள்ளார். ஆனால் ஏற்கெனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக தமிழகத்தில் 274 கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 104 கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கப்பட உள்ளது என்றும் வைகோ தெரிவித்தார்.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் பா.ஜ.கவுக்கு கோடிக்கனக்கான வருமானம் கிடைக்கும், என்பதாலேயே இதனை நிறைவேற்றியே ஆகவேண்டும் என மத்திய அரசு முனைப்பாக உள்ளது. இதற்கு எடப்பாடியின் அரசும் முட்டுக்கொடுத்து வருகிறது என சாடினார்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்பட்டால், காவிரி டெல்டா பகுதி அடியோடு அழிக்கப்பட்டு பாலைவனமாக ஆகக்கூடும். மேலும், மேகதாது அணை வராது என்றார்கள். ஆனால், அதற்கான ஆயத்த பணிகள் முடிந்தேவிட்டது. கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு பின்புலமாக உள்ளது. எனவே தமிழகத்திற்கு வர உள்ள ஆபத்துகளை எதிர்த்து கிளர்ந்து எழுந்தால்தான் எதிர்கால சந்ததிகளை பாதுகாக்க முடியும் என வைகோ தெரிவித்தார்.
Also Read
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
"புயலால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் KKSSR உறுதி!
-
அதானியை காப்பாற்ற 35 ஆயிரம் கோடி LIC நிதியை வழங்கிய ஒன்றிய பாஜக அரசு... அம்பலப்படுத்திய பிரபல நாளிதழ் !
-
“காஷ்மீர் மக்களை பழிவாங்குவது ஏன்? - அமித்ஷா சொல்வது ‘இரட்டை’ நாக்கு வாக்குமூலம்” : முரசொலி விமர்சனம்!