Politics

மத்திய அரசு தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை : நல்லகண்ணு குற்றசாட்டு!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

மும்மொழித் திட்டம் என மத்திய அரசு கொண்டு வருவது இந்தியை திணிக்கும் முயற்சி எனவும், இந்தியை பல வருடங்களாக எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். வடமொழிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் தமிழுக்கு கொடுக்கப்படுவதில்லை எனவும், மத்திய அரசு இந்த முடிவைத் திரும்பப்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருப்பது கண்டிக்கத்தக்கது. மேகதாது திட்டத்தை கைவிடவேண்டும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும் என்பதால் இத்திட்டங்களை கைவிட வேண்டும். எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. குடிநீர் பிரச்னையை நிரந்தரமாகத் தீர்க்க திட்டத்தை வகுக்க வேண்டும்.

நீட் தேர்வை தமிழகம் எதிர்க்கிறது . இதில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்படுகிறது. நீட் தேர்வைக் கைவிட வேண்டும். நாங்கள் மோடியை எதிர்க்கவில்லை, மோடியின் கொள்கையைத் தான் எதிர்க்கிறோம். தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை மோடி செய்யத் தவறிவிட்டார். பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த சில நாட்களுக்குள் மதவெறி தலைவிரித்தாடுகிறது என குற்றம் சாட்டினார்.

எடப்பாடி ஆட்சி எந்த வித திட்டத்தையும் நிறைவேற்றவில்லை எனவும் தெரிவித்தார். மத்திய அரசை எதிர்க்க தைரியம் இல்லாதவர்கள் ஆகிவிட்டார்கள் எனவும் மத்திய அரசின் தயவில் வாழும் எடப்பாடி ஆட்சி தொடரக்கூடாது என கருதுகிறோம் எனவும் தெரிவித்தார்.

மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் விடுதலை செய்யாமல் உள்ளது கவலை அளிக்கிறது. கவர்னர் உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் நல்லகண்ணு.