File image
Politics

ஆட்சிப் பொறுப்பேற்கும் அரசு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவரவேண்டும்: கனிமொழி எம்.பி

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் மூலம் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனிமொழி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக தூத்துக்குடி வந்தார். அவருக்கு தூத்துக்குடி மாவட்ட தி.மு.க பொறுப்பாளர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் உற்சாக வரவேற்பளித்தனர்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் கனிமொழி எம்.பி. அப்போது அவர் தெரிவித்ததாவது:

“தண்ணீர் பற்றாக்குறை நிலவும் இந்நேரத்தில் குளங்களை தூர்வார்வதற்கான பணிகளை மேற்கொள்வேன். குடிநீர் பிரச்னைகளை முன்னிறுத்தி தேவையான நடவடிக்கை எடுக்கப் பாடுபடுவேன். தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்து நிச்சயமாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்.

வெற்றிபெற்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முறையாவது எல்லோரையும் அரவணைத்துக்கொண்டு இந்தியா என்பது அனைவருக்கும் சொந்தம் என்ற உணர்வை ஏற்படுத்தும் அரசாங்கத்தை உருவாக்கி நடத்த வேண்டும்.

புதிதாக அமையவிருக்கும் அரசு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவரவேண்டும். பொருளாதாரத்தில் நிலவும் சரிவு நிலையையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் போக்கவேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.