Politics

“மோடியின் முன் மண்டியிட்டது தேர்தல் ஆணையம்” - ராகுல் காந்தி ஆவேசம்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அப்போது தொடங்கி மோடியும், பா.ஜ.கவினரும் விதிமீறலில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலமுறை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரில் ஒன்றின் மீது கூட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. விதிமீறல் உள்ளதாக கூறிய தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் கருத்தும் நிராகரிக்கப்பட்டது.

தொடர்ந்து மோடிக்கு ஆதரவாகவே ஆணையம் செயல்பட்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கேதார்நாத்தில் மோடி நடத்திய தியான நாடகமும் அரங்கேறியுள்ளது. இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடந்த நிலையில், மோடி நடத்திய நாடகம் தேர்தல் விதிமீறல் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. சந்திரபாபு நாயுடுவும், திரிணாமுல் காங்கிரசும் புகார் அளித்துள்ளனர். ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தேர்தல் ஆணையம்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “ தேர்தல் தேதி அறிவித்ததில் தொடங்கி, வாக்குபதிவு இயந்திரங்கள், நமோ டி.வி, ராணுவ வீரர்களை பற்றி பிரசாரத்தில் பேசியது, இப்போது கேதார்நாத் நாடகம் வரை; மோடியின் முன் மண்டியிட்டு விட்டது தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையம் மீது பயமும் மதிப்பும் இருந்தது. இனி அது இருக்காது” என்று தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடியுள்ளார்.