Politics

மோடி போட்ட பிச்சையில் ஆட்சிக்கு வந்தவர் எடப்பாடி பழனிசாமி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தல் கடந்த ஏப்.,18ல் நடந்து முடிந்தது. இதனையடுத்து வருகிற மே 19 அன்று தமிழகத்தில் மேலும் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

இதற்காக அரசியல் தலைவர் பலர் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட உள்ள தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ”தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மேலும் 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க.வின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர். ஜூன் 3ம் தேதி கலைஞர் பிறந்த நாளன்று தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்து, தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார்.” என்றார்

தொடர்ந்து பேசிய உதயநிதி, ”தற்போது நடைபெற்று வரும் ஆட்சி கோமா நிலையில் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகவில்லை. சசிகலாவின் காலில் தவழ்ந்து சென்றும், மோடி போட்ட பிச்சையாலும் தான் அவருக்கு முதலமைச்சர் பதவி கிடைத்துள்ளது” என்றார்.

மேலும், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது மனிதாபிமானமே இல்லாமல் 13 பேரை சுட்டுக்கொன்ற அரசு எடப்பாடியின் தமிழக அரசு. கடந்த 2 ஆண்டுகளாக தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், நீட் ரத்து, கல்வி மற்றும் விவசாயக் கடன் ரத்து, 100 நாள் வேலை 150 நாட்களுக்கு நீட்டிப்பு, கேஸ், கேபிள் விலை குறைப்பு, கூட்டுறவு நகை கடன் ரத்து போன்ற மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என உறுதியளித்தார்.

இதற்கிடையில், அய்யம்பாளையம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், அ.தி.மு.கவைச் சேர்ந்த 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.