உணர்வோசை
ஆணாதிக்கம் உடையாத வரை பெண் விடுதலை நேராது.. சமத்துவம் எப்போது உருவாகும் ? #ஆண்கள்தின சிறப்பு கட்டுரை !
நகரங்களில் பாலின சமத்துவம் இருக்கிறதா?
நகரங்கள் முதலில் எப்படி உருவாகின்றன?
தொடக்க காலத்தில் கிராமங்களின் விளைபொருட்களை விற்பதற்கான வணிக மையமாக நகரங்கள் திகழ்ந்தன. பெரும்பாலும் இத்தகைய நகரங்கள் அக்காலங்களில் துறைமுகங்களாக இருந்தன. எனவேதான் பூம்புகார், மாமல்லபுரம் ஆகியவை கலை பேசும் இடங்களாக கண்டெடுக்கப்பட்டன. பிற நாடுகள் மற்றும் பல ஊர்களின் வணிகர்கள் வந்து புழங்கும் இடங்களாக நகரங்கள் இருக்கின்றன.
பல ஊர்களின் வணிகர்கள் வந்து புழங்குவதால் சாதி மறைந்து விடுமா?
பல ஊர்களில் இருந்து வணிகர்கள் வந்தாலும் அந்தந்த ஊர்களின் சமூக அடுக்குகளில் வணிகம் செய்யக் கூடிய உயரத்தில் இருக்கக் கூடிய சாதிகளைச் சேர்ந்தவர்களாகத்தான் அந்த வணிகர்கள் இருக்க முடியும். அந்த வணிகர்களின் வீட்டிலோ நிலத்திலோ அல்லது ஊரின் சேரியிலோ இருக்கும் பட்டியல் சாதியினர் நகரத்துக்கு வரும் சாத்தியம் இருந்திருக்காது, இல்லையா?
காலவோட்டத்தில் ஆங்கில ஆட்சி வருகிறது. நகரங்கள் புது வடிவங்களை அடைகின்றன. ஏகாதிபத்தியம் நகரங்களின் செங்கோலாக மாறுகிறது. புனித ஜார்ஜ் கோட்டை சென்னையில் உருவாகிறது. அருகாமை கிராமங்கள் மற்றும் ஊர்களில் இருக்கும் மக்கள் நகரம் கட்ட அழைக்கப்படுகின்றனர். உயர்சாதி வணிகர்கள் கலக்கும் இடமாக இருந்த நகர அடையாளம் மாறி, எல்லா சாதிகளின் ஏழைகளும் உழைக்கும் வர்க்கமாக இயங்கும் தன்மையையும் நகரம் பெறுகிறது.
உழைக்கும் வர்க்கம் எனினும் அம்மக்கள் அனைவரும் அவரவர் ஊர்களில்தான் குல தெய்வங்களைக் கொண்டிருந்தனர். ஊர்களில் துண்டு துக்காணி நிலங்களையும் சொந்த பந்தங்களையும் கொண்டிருந்தனர். அகமணமுறை பாராட்டிக் கொண்டிருந்தனர். நகரம் வந்த பிறகும் அதே பண்பாட்டைதான் அவர்கள் தொடர்ந்தனர். அவர்கள் வீட்டிலிருந்து ஒரு பெண் பிற சாதியரை காதலிக்கும்போது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கிராமங்களில் பிற சாதியரை காதலிக்கும் வழக்கத்தைக் காட்டிலும் நகரங்களில் சாத்தியம் அதிகம். ஏனெனில் நகரங்களின் சேரிகள் ஊர் சேரி போலல்லாமல் எல்லா சாதியரும் இருந்தனர். அங்கு வசிக்கும் பிற்படுத்தப்பட்டவன் ஊரில் ஒடுக்கிக் கொண்டிருந்த பட்டியல் சாதியருடன் உழைப்பாளியாக நகரத்தால் ஒன்று சேர்க்கப்பட்டிருந்தான்.
பெண்ணாக இருந்தபோதும் தம் சாதி மூலதனத்தை காக்கவும் வளர்க்கவுமே கல்வி, வேலை முதலியவற்றில் அவள் தொடக்கத்தில் புகுத்தப்பட்டாள்.
வருணாசிரமம் உடையாத வரை, சாதி உடையாது. சாதி உடையாத வரை சாதியின் தனிச்சலுகைகள் உடையாது. சாதிய தனிச்சலுகைகள் உடையாத வரை ஆணாதிக்கம் உடையாது. ஆணாதிக்கம் உடையாத வரை பெண் விடுதலை நேராது.
ஊர்களிலிருந்து பிறந்த நகரங்கள் நவதாராளமயம் போர்த்தியும் பாலின சமத்துவம் உருவாக்க முடியாததற்குக் காரணம் இவைதாம்.
பாலின சமத்துவம் நேர, சாதியும் வர்க்கமும் ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் எல்லா ஆண்களும் சமமாகும் சூழல் மலரும். அப்போதுதான் எல்லா பெண்களும் ஆணின் ஆதிக்கத்துக்கு எதிராக எழுப்பும் குரல் சமமாக முடியும். பாலின சமத்துவம் உருவாகவும் முடியும்.
பாலின சமத்துவத்துக்கு முதல் தேவை சமத்துவம்!
சமத்துவம் உருவாக்கப்படாமல் பாலின சமத்துவத்தை உருவாக்கிட முடியும் என சொல்லப்படுபவை யாவும் பார்ப்பன, நவதாராளவாத பீடச் சேவைகள் மட்டும்தான்.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!