உணர்வோசை

‘இலவசங்களால் வீழ்ந்தோம் ப்ரோ’.. என கூறுபவர்களுக்கு அறிவு தேவையில்லை.. மனிதம் இருந்தாலே போதும்!

நேற்று இரவு டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் ஒரு விவாதம். தமிழ்நாட்டில் வழங்கப்படும் இலவசங்களை கொச்சைப்படுத்தும் வகையிலான கேள்விக்கு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் கேள்வி கேட்டவரை தன் பதிலால் அடித்து துவம்சம் செய்துவிட்டார். நேற்று இரவிலிருந்தே அக்காணொளி காட்சி வைரலாகி விட்டது.

பொதுவாக அரசு தரும் இலவசங்களை கொச்சையாகப் பார்க்கும் பார்வை பரவலாக இருக்கிறது.

அப்பார்வையை அங்கீகரிக்கும் விதத்தில் கடந்த வாரம் பிரதமர் மோடியும் கூட பேசினார்.

அரசாங்கம் இலவசம் தருவது தவறா?

இலவசத் திட்டங்கள் அதிகமாக அறிவித்து மக்களை நாசப்படுத்துகிறார்கள் என்கிற குரல் அதிகமாகக் கேட்க தொடங்கியது 2006ம் ஆண்டில் இருந்துதான். ஏனென்றால் 2006ம் ஆண்டில்தான், திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு இலவச டிவி, கேஸ் ஸ்டவ் போன்றவற்றை வழங்கப் போவதாக அறிவித்திருந்தது.. அதிலிருந்துதான் இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்றுகின்றனர் என்கிற வாதம் கேட்க தொடங்கியது.

உண்மை என்ன தெரியுமா?

தி.மு.கவின் 2006ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் டிவி, கேஸ் ஸ்டவ் மட்டும் இலவசமாக வழங்கப்படவிருப்பதாக சொல்லப்படவில்லை. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கப் போவதாகவும் சொல்லப்பட்டு 2009-10 ஆண்டுக்கான பட்ஜெட்டில் எல்லா இலவசங்களுக்கான அறிவிப்புகளும் வரவும் செய்தன.

தொடர்ந்து திராவிடக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் சைக்கிள், மிக்ஸி எனப் பல இலவசங்கள் இடம் பெற்றன. ‘இலவசங்களால் வீழ்ந்தோம் ப்ரோ’ என ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருந்த அதே சூழலில் இலவசங்கள் அறிவித்து திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வருவதும் நடந்து கொண்டேதான் இருந்தது.

மின்சாரம் இலவசமாகக் கொடுத்ததைக் கூட ஒப்புக் கொள்ளலாம். மிக்ஸி, டிவி போன்றவற்றையும் இலவசமாகக் கொடுப்பது சரியாகுமா எனக் கேட்கலாம்?

ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.

இலவசங்களை பற்றி விமர்சிக்க முடிவெடுத்து விட்டால், சுமாராக நூறு வருடங்களுக்கு முன்னிருந்து தொடங்க வேண்டும். ஒரு தலைமுறைக்கும் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த அனைவரும் சாப்பிடவேனும் பள்ளிக்கு வர வேண்டுமென நீதிக்கட்சி ஆட்சியின்போது மதிய உணவு இலவசமாக பள்ளியில் வழங்கப்பட்டது. பிறகு அந்த வழக்கம் பிரிட்டிஷ்ஷால நிறுத்தப்பட்டு மீண்டும் காமராஜர் ஆட்சியில் தொடங்கப்பட்டது.

‘மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம்’ என்ற அறிஞர் அண்ணாவின் குரல் தொடங்கி, நியாய விலைக் கடை உள்ளிட்ட திட்டங்கள் எல்லாமும் நம் சமூகம் கொண்டிருக்கிற சாதி மற்றும் வர்க்கப் பிரிவினைகளைத் தாண்டி எல்லா மக்களுக்கும் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் போய்ச் சேர வேண்டும் என்பதற்குதான். தாலிக்கு தங்கம், மாணவிகளுக்கு சைக்கிள், இலவசக் கல்வித்திட்டம் எனத் தமிழ்நாடு மற்ற மாநிலங்களைத் தாண்டி இன்றும் பல தரவுகளில் முன்னே இருப்பதற்குக் காரணம் இலவசமாக வழங்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள்தான்.

மட்டுமின்றி, 1990ம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரகொள்கை மாறியது. தாராளமயக் கொள்கை அறிமுகமானது. அதற்குப் பின் ஏற்பட்ட வசதிகளும் வாய்ப்புகளும் எல்லா மக்களையும் சென்றடைவதுதான் சமூகநீதி. அவற்றின் இயல்புக்கு சென்றடையட்டும் என விட்டிருந்தால், டிவியும் மிக்ஸியும் மேல் நடுத்தர மக்கள் வீடுகளை மட்டும்தான் அடைந்திருக்கும். எல்லா வீடுகளுக்கும் வந்திருக்காது.

தாராளமயத்தை கொண்டு வந்த கார்ப்பரெட் நிறுவனங்கள் ஏழைகளுக்கோ நடுத்தட்டு மக்களுக்கோ கரிசனம் காட்டாது. புதுப் பொருளாதாரக் கொள்கையின் வசதிகள் எல்லாமும் வசதிப்பட்டவனை மட்டும்தான் சென்றடைந்திருக்கும். கல்வியில இருந்து வேலைவாய்ப்பு வரை எல்லா மக்களுக்கும் சமவாய்ப்பு இருக்க வேண்டுமென நினைக்கும் மண்ணை புதிதாக வந்த தாராளமயம் மட்டும் மாற்ற முடியுமா, என்ன?

தாராளமயமாக்கல் கொண்டு வந்த ஒருதலைபட்சமான வசதிகள், எல்லா தரப்பு மக்களையும் சென்று சேர விரும்பியதன் விளைவுதான் இலவச மக்கள் நலத்திட்டங்கள். கார்ப்பரெட் கையில கடிவாளம் இருக்கும் நாட்டில், பொருளாதார நீதி மக்களுக்கு கிடைக்க இருக்கக்கூடிய வாய்ப்பு இலவசங்கள் மட்டும்தான்.

இந்த உண்மையைப் புரிந்து கொள்வதற்கு அறிவு கூடத் தேவையில்லை, மனிதம் இருந்தாலே போதுமானது.

Also Read: 'சரீரத்துக்கும் ஆத்மாவுக்கும் இருக்கற உறவு'.. வசனத்திலும் நாயகன் கமல்ஹாசன்: எந்த படத்தின் வசனம் இது?