உணர்வோசை
இன்றைய சூழலில் நிம்மதியாக வாழ்வதற்கான தீர்வுதான் என்ன?.. உங்களுக்கான குட்டி கதை இதோ!
இன்றையச் சூழலில் வாழும் தலைமுறைக்கு நிறையப் பிரச்சினைகள் உண்டு. மன அழுத்தம், டென்ஷன், மனச்சோர்வு என பல பெயர்களில் மனநலம் தேவைப்படும் வாழ்க்கைச்சூழலே இன்று பிரதானம். பொருட்களாலும் நுகர்வாலும் தன்னலத்தாலும் பின்னப்படுகிற இன்றைய நவதாராளவாதச் சூழலில் வாழ்வதற்கான தீர்வுதான் என்ன?
Fight Club என்ற ஒரு ஆங்கிலப்படத்தில் ஒரு வசனம் உண்டு. What you own, ends up owning you. உங்களுக்கு சொந்தமாக எது இருக்கிறதோ, உண்மையில அதற்கு சொந்தமாகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள் என மொழி பெயர்க்கலாம்.
மனிதத் துயருக்குக் காரணமென ‘பற்றை’ புத்தர் வரையறுத்தார். அதாவது நான் ஒருவரிடமோ ஒரு பொருளிடமோ பற்றுக் கொண்டால், அது அல்லது அந்த நபர் இல்லாமல் போகும்போது துயருருவேன். எனவே துயரை அறுக்க வேண்டுமெனில், உலகுடன் நாம் கொண்டிருக்கும் பற்றைத் துறக்க வேண்டும் என்பதே புத்தரின் வழி.
பற்றறுத்தல் அத்தனை சுலபமா?
ஒரு நாட்டில் ஒரு துறவி இருந்தார். நாட்டின் மக்களுக்கு எல்லாம் பிரச்சினை என்றால் துறவியை சென்று பார்ப்பார்கள். துறவி பிரச்சினை தீர்க்கும் வழி சொல்வார். அதை செய்வார்கள்.
துறவி சொன்ன தீர்வுகள் யாவும் நல்ல பலன் அளிக்கிறது. நாடெங்கும் துறவியின் புகழ் பரவுகிறது. அரசனையும் எட்டுகிறது. ரொம்ப நாளாகவே தன்னுள் இருக்கும் பிரச்சினை ஒன்றை பற்றி துறவியிடம் யோசனை கேட்க காட்டுக்கு செல்கிறான் அரசன். துறவியும் தீர்வு சொல்கிறார். அரசன் அந்த தீர்வை முயன்ற சில நாட்களில் பிரச்சினை தீர்கிறது. மிகுந்த சந்தோஷம் அடைகிறான்.
துறவியை நோக்கி காட்டுக்கு ஆனந்தத்தோடு வரும் அரசன், அவருக்கு வேண்டியதை தான் செய்து தருவதாக சொல்லி, விரும்பியதை கேட்க சொல்கிறான். துறவி முதலில் பொருட்படுத்தவில்லை. அரசன் கட்டாயப்படுத்துகிறான். 'ஒருகட்டத்தில், அரச வாழ்க்கை கொடு' என கேட்கிறார் துறவி. அரசனும் ஒப்புக்கொள்கிறான்.
'ரதம் எங்கே?' என துறவி கேட்கிறார். அரசன் எடுத்து வருகிறான். அரண்மனைக்கு துறவியை அழைத்து செல்கிறான் அரசன். அரண்மனையில் ராஜபோக வாழ்க்கை வாழ்கிறார் துறவி. அறுசுவை உணவுகளும் படாடோபங்களும் பெண்களும் கேளிக்கையுமென கொண்டாட்ட வாழ்க்கை வாழ்கிறார்.
நாளாக நாளாக சந்தேகம் கொள்கிறான் அரசன். 'முற்றும் துறந்தவன் எப்படி இப்படி எல்லாவற்றையும் ரசித்து உய்த்து வாழ முடியும்?' துறவியின் நடத்தையில் மாற்றம் நேராததால், சந்தேகம் வலுக்கிறது. துறவி தன்னை ஏமாற்றிவிட்டதாக எண்ணி அரசன் பொருமுகிறான். ஒருநாள் தன் கோபத்தை வெளியிட்டு, 'அவர் உண்மையிலேயே துறவியா, இல்லை போலியா' என கேட்டும் விடுகிறான்.
அரசனை பார்த்து புன்னகைக்கிறார் துறவி. ரதத்தை எடுத்து தான் நிறுத்த சொல்லும் வரைக்கும் அரசனை ஓட்டச் சொல்கிறார். துறவி ரதத்தில் ஏறுகிறார். அரசனும் ரதத்தை எடுக்கிறான். பல காத தூரம் ரதம் செல்கிறது. அரசன் கோபத்தில் எதுவும் பேசாமல் ரதத்தை ஓட்டுகிறான். துறவி ரதத்தில் நின்று புன்னகையுடன் நாட்டை வேடிக்கை பார்த்தபடி வந்து கொண்டிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் கோபத்தோடு 'எங்கு போக வேண்டும்' என அரசன் கேட்கிறான். 'இன்னும் போ' என்கிறார் துறவி. அப்படியே சென்று நாட்டின் எல்லையையே அடைந்து விடுகிறார்கள். அரசன் ரதத்தை நிறுத்துகிறான். 'ஏன்' என துறவி காரணம் கேட்க, 'எல்லைக்கோட்டுக்கே வந்து விட்டதாக' அரசன் சொல்கிறான். துறவி ரதத்தில் இருந்து இறங்குகிறார்.
தன் தலையில் இருக்கும் மகுடத்தை கழற்றி அரசனிடம் கொடுக்கிறார் துறவி. தன் ஆபரணங்களை அவிழ்த்துக் கொடுக்கிறார். தன் ஆடைகளையும் கழற்றி கொடுக்கிறார். முற்றுமுழு நிர்வாணமாக நின்று கொண்டு அரசனிடம் கேட்கிறார்,
"இப்போது இந்த கோட்டை தாண்டி என்னால் சென்றுவிட முடியும். உன்னால் முடியுமா?"
அரசன் தவறுணர்ந்து கண்ணீர் மல்குகிறான்.
"நான் உன் அரச வாழ்க்கை எல்லாவற்றையும் அனுபவித்தாலும் அதில் எதன் மீதும் எனக்கு பற்று இருக்கவில்லை. அதுதான் நான்!" என்று எல்லைக்கோட்டை தாண்டி நிர்வாணமாக அடுத்த நாட்டுக்கு செல்கிறார் துறவி.
உடைமை என்பது ஒரு மனநிலை. உடைமைகளோடு இருப்பதாலேயே உடைமை மன நிலையோடு இருப்பதாக பொருளாகாது.
கோடிகளில் புரளும் துறவிகளுக்கு மத்தியில் மெய்யான துறவை புரிந்தால் துறவியும் தேவையில்லை. துயரும் தேவையில்லை. வாழ்தலும் எளிதாகும்.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?