உணர்வோசை

உயிரைப் பணயம் வைத்து ஆடும் இரக்கமற்ற விளையாட்டு - ‘Squid Game’ வெப் சீரிஸ் சொல்வது என்ன?

கடந்த சில மாதங்களாக மிக அதிகமாகப் பேசப்படும் இணையத் தொடர், Squid Game!

கதைப்படி நாயகன் குதிரை ரேஸில் பணம் கட்டி சம்பாதிக்க முயலுபவன். வேறு வேலை இல்லை. கடனும் அதிகம். சுலபமாக பணம் பண்ண ஆர்வம் கொண்டவன். ஒருநாள் கடன்காரர்கள் வந்து அவனை மிரட்ட, எப்படியேனும் கடனை அடுத்த சில நாட்களில் அடைக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்போதுதான் எதிர்பாராத ஒரு விஷயம் நடக்கிறது. ஒரு நபர் வந்து அவனை சந்திக்கிறார். அவனுக்கு பணம் கொடுப்பதாகச் சொல்கிறார். அவன் நம்ப மறுக்கிறான். கையில் இருக்கும் பணத்தைக் காட்டுகிறார் வந்தவர். நாயகனின் கண்கள் மின்னுகின்றன. அந்தப் பணத்தை நாயகன் பெற வேண்டுமெனில் ஒரு நிபந்தனை. ஒரு விளையாட்டு விளையாட வேண்டும்.

இரண்டு அட்டைகள்; ஒன்று தரையில் இருக்கும். இன்னொரு அட்டையை வைத்து அடித்து தரையில் இருக்கும் அட்டையை எம்பி திரும்ப வைக்க வேண்டும். நாயகன் அந்த அட்டையை திருப்ப முடியாமல், புதிய நபர் திருப்ப முடிந்தால் அவர் நாயகனை ஓங்கி அறைவார்.

இதுதான் விளையாட்டு. நாயகன் முயலுவான். அட்டை திரும்பாது. புதிய நபருக்கு ஒவ்வொரு முறையும் சரியாக அட்டை திரும்புகிறது. நாயகனுக்கு அறை விழுகிறது. மறுபேச்சின்றி அறைகளை ஏற்கிறான். கன்னம் பழுத்து சிவக்குமளவு அறைகள் தொடர்கின்றன. ஒரு கட்டத்தில் நாயகன் அடிக்கும் அட்டைக்கு தரையில் இருக்கும் அட்டை திரும்பி விடுகிறது. வாங்கிய அடிகளுக்கு பதிலாக ஆனந்தத்துடன் புதிய நபரை அறைய நாயகன் வருகையில், புதிய நபர் பணத்தைக் காட்டுகிறார். அறைய வந்த நாயகன் நின்று பணத்தை வாங்கிக் கொள்கிறான்.

இதுபோன்ற பல விளையாட்டுகள் இருப்பதாகவும் அவற்றை விளையாடி ஜெயித்தால் பல நூறு கோடி ரூபாய் பணம் கிடைக்கும் என்றும் தொடர்பு கொள்வதற்கு ஓர் அட்டையைக் கொடுத்துச் செல்கிறார் புதிய நபர்.

வருமானமின்றி அல்லாடிக் கொண்டிருக்கும் வாழ்வில் சுலபமாக பெரும் பணம் வருகிறது என்றால் யார் விடுவார்?

நாயகன் விளையாட்டுக்குச் செல்கிறான்.

உள்ளே நாயகனைப் போல் பலர் விளையாட்டில் கலந்து கொள்ள வருகின்றனர். முதல் நாள் விளையாட்டுக்கு அனைவரும் அழைக்கப்படுகிறார்கள். ஆர்வத்துடன் நாயகன் கலந்து கொள்கிறான்.

ஒரு மைதானம். ஓரத்தில் ஒரு பெரிய பொம்மை இருக்கிறது. பொம்மையில் இருந்து இசை எழும். இசை ஒலிக்கும் வரை மைதானத்தில் அனைவரும் பொம்மையை நோக்கி ஓட வேண்டும். சட்டென இசை நிறுத்தப்படும். அந்த நேரத்தில் ஓடுபவர்கள் சடாரென ஓடுவதை நிறுத்த வேண்டும். அசைவின்றி சிலையாக நிற்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் மைதானத்தின் ஒரு ஓரத்திலிருந்து மறு ஓரத்தை இந்த ஓட்டத்தினூடாக அனைவரும் அடைந்திருக்க வேண்டும். இதுதான் விளையாட்டு விதி. விளையாட்டுத் தொடங்குகிறது.

இசை ஒலித்ததும் அனைவரும் ஓடுகின்றனர். பெண்கள், தம்பதிகள், முதியோர், இளைஞர்கள் என பலதரப்பட்டோரை கொண்ட கூட்டம். சட்டென இசை நிற்கிறது. அனைவரும் நிற்கின்றனர். பொம்மையாக நிற்பவர்களைத் தாண்டி வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள், அசைவை சட்டென நிறுத்த முடியாதவர்கள் எனப் பலர் இருக்கின்றனர். இசை நிறுத்தப்பட்டதும் அவர்கள் அனைவரும் காக்காய், குருவி போல் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். பொம்மைகளாக நிற்பவர்களுக்கு அதிர்ச்சி. அசைந்தால் தன் உயிர் போகும் என்ற பயம். ஏதும் செய்ய முடியாமல் உறைந்து நிற்கையில், மீண்டும் இசை ஒலிக்கிறது. வேறு வழியில்லை. மீண்டும் ஓடுகின்றனர். பிணங்களையும் காயத்தில் கிடப்பவர்களையும் பொருட்படுத்தாமல் தாண்டி ஓட வேண்டிய நிலை. ஒவ்வொரு முறை இசை நிற்கும்போதும் தோட்டாக்கள் வெடிக்கின்றன. உடல்கள் சரிகின்றன. ஒருவழியாய் நேரம் முடிகிறது. மறுமுனையை அடைந்தவர்களை தவிர்த்து மற்ற அனைவரும் சுட்டுத் தள்ளப்படுகின்றனர். நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படுகின்றனர். மிஞ்சியோருக்கு அடுத்த கட்ட விளையாட்டு காத்திருக்கிறது.

பணம் வேண்டுமென்கிற ஆசையில் வந்த நாயகன் ஒவ்வொரு கட்டத்திலும் தன் உயிரைக் காக்கவென விளையாடுகிறான். பிற அணியினர் மனம் மாறுவது, கூட இருப்பவரையே கொல்ல வேண்டியது என விளையாட்டுக் கட்டங்கள் குரூரமாக மாறிக் கொண்டிருக்கின்றன. இறுதியில் நாயகன் என்னவாகிறான் என்பதே இத்தொடரின் மிச்சக் கதை.

நெட்ஃப்ளிக்ஸ்ஸில் காணக்கிடைக்கும் இத்தொடர் உலகளாவிய அளவில் புகழ் பெற்றிருக்கிறது. உலகப் புகழுக்கான முக்கியக் காரணமாக முதலாளித்துவச் சமூகம் நம்மை செலுத்திக் கொண்டிருக்கும் இரக்கமற்ற உலகைத் தொடரின் விளையாட்டுகள் பிரதிபலிப்பதாக சொல்லப்படுகிறது.

Also Read: கொக்கெயின் கடத்தலுக்கு உதவிய அமெரிக்க ராணுவம்... கடத்தல் மன்னன் பேப்லோ எஸ்கோபார் கொலையின் பின்னணி என்ன?