உணர்வோசை

“தமிழ்நாடு இன்றும் டெல்லிக்கு சிம்மசொப்பனமாக இருப்பது ஏன்?” - காரணம் இவர்தான்!

Customize என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்போம். உணவு, தங்குமிடம் என இன்று அதிகம் புழங்கும் வார்த்தை இது. நம் தேவைக்கேற்ப ஒரு பொருளை அல்லது விஷயத்தை கூட்டி குறைத்து தகவமைத்து வாங்கிக் கொள்கிறோம்.

உதாரணமாக தோசை வாங்கும்போது எனக்கு தேவையில்லாத பல சட்னிகளை வீணாக வாங்குவதற்குப் பதிலாக எனக்கு தேவையான ஒரு சட்னியை அதிகமாகவோ அல்லது பதிலாக சாம்பாரோ வாங்கிக் கொள்வது என் தேவையை பூர்த்தி செய்யும். வீணாகுதலையும் தவிர்க்கும். உணவு மட்டுமின்றி பல நிலைகளில் இத்தன்மையை கடைப்பிடிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம்.

மனித உறவுகளிலேயே பார்த்தோமென்றாலும் நாம் ஒத்துப்போகும் common minimum விஷயங்களை மட்டும் ஏற்று முரண்பட்டு நிற்கும் விஷயங்களை தவிர்க்கும் உறவுகளையே சமூகத்தில் பேணுகிறோம். கிட்டத்தட்ட customized relations என்கிற பாணி.

இத்தகைய பாணியை சித்தாந்தத்தில் கொண்டு வர முடியுமா என்றால் கொண்டு வர முடியும் என்பதற்கு உலகெங்கும் பல தலைவர்கள் உதாரணத்துக்கு இருக்கின்றனர். நம்மூரில் பேரறிஞர் அண்ணா இருக்கிறார்.

பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இணைவது தொடங்கி பிறகு அதிகாரத்தின் அவசியம் புரிந்து அங்கிருந்து வெளியேறி கட்சி தொடங்கி 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற உத்தியை எடுத்துக்கொண்டு வாக்கரசியலுக்கென பிரத்யேகமாக நம் மக்களை பங்குபெற வைக்கும் கட்டமைப்பை உருவாக்கி ஆட்சிக்கு முயன்று பின் திராவிட நாடு கோஷத்தை கைவிட்டு அதே நேரத்தில் அடிப்படை நோக்கங்களில் அவற்றை பதிய வைத்துச் சென்று இன்று வரை இந்தியாவில் வித்தியாசமான கூட்டமாக நாம் இருப்பதற்கான காரணங்களுள் முக்கியமான ஒன்று அண்ணாவின் சித்தாந்த customization!

பெரியாரின் பல விஷயங்களில் ஒன்றான நாத்திகத்தை அண்ணா மாற்றினார். கைவிடவில்லை. திராவிட நாடு கோரிக்கையை 'நியாயங்கள் இன்றும் இருக்கிறது' என திரியை கிள்ளிப் போட்டே ஓரமாக வைத்தார். இந்திக்கு எதிராக நின்றார். அவர் அதிகாரப்பூர்வமாக தொடங்கியவற்றையே இன்னும் நமது போராட்டமாக தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்.

வடக்கில் பிறந்த அம்பேத்கரின் கொள்கைகளை மக்களுக்கான அரசியலாக customize செய்து அதிகாரம் பற்றும் திறன் படைத்தவர் எவரும் இல்லை. ஆதலால் இன்னும் அங்கு மக்கள் அறியாமையில் இருக்கின்றனர். நல்லவேளையாக, தெற்கே தமிழகத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தையும் ஆரிய எதிர்ப்பையும் customize செய்து மக்களுக்கான அரசியலாக மாற்றி அதிகாரம் பற்றும் திறன் வாய்ந்த அண்ணா இருந்தார். நாம் இன்று வரை டெல்லிக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறோம்.

பேரறிஞர் எனச் சொல்வது அவர் அறிந்தவற்றால் அல்ல; அறிந்தவற்றை வெற்றிகரமாக எப்படி நடைமுறைப்படுத்துவது என அறிந்திருந்ததால்!

Also Read: ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ எனும் பெயர் உருவான கதை தெரியுமா? - அண்ணா அப்பெயரை முன்மொழிந்தது எப்படி?