உணர்வோசை

“காதலைக் கொண்டாடுங்கள்.. இயற்கையாக; அரசியலாக; சமூகமாக”: உறவுச் சிக்கல்களும் சமூகமும் - சிறப்புப் பகிர்வு!

இன்று காதலர் தினம். ‘இனி சின்ராசை கையிலயே புடிக்க முடியாது’ என்கிற பாணியில் தமிழக மற்றும் இந்திய பிற்போக்கு அரசியல்வாதிகள் பலர் பிஸியாக இருக்கும் நாள். ‘காதலர்களை அவமானப்படுத்துகிறேன் பேர்வழி’ என கூறிக்கொண்டு நாய்களுக்கு கல்யாணம் செய்து வைப்பது, பொது இடங்களில் ஜோடிகளை பார்த்தால் திருமணம் செய்து வைப்பதாக சொல்லி மிரட்டுவது, பெற்றோருக்கு தொலைபேசியில் அழைப்பது, காவல்துறையிடம் பிடித்துக் கொடுப்பது என்பது போன்ற வீர சாகசங்களை அறை போட்டு யோசித்து செயல்படுத்த முனைந்து தாங்கள் பிடுங்கும் ஆணிகள் எல்லாமுமே தேவையில்லாத ஆணிகளே என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான நாள்.

இத்தனை சிறப்புமிக்க நாளில் இளைஞர்களைப் பற்றியும் அவர்களின் அகச் சிக்கல்கள் பற்றியும் காதலை பற்றிய ஒரு பரந்துபட்ட பார்வையும் அளிப்பதுமே காலத்தின் தேவையாக இருக்கிறது. மேற்பத்தியில் சொல்லப்பட்டிருக்கும் ‘பில்லக்கா பாய்ஸ்’ பற்றிக் கவலைப்படாமல் காதலிலும் காதல் உறவிலும் பொதுவாக இளைஞர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்பதை பற்றி பேசுவோம் வாருங்கள்.

ஆண், பெண் உறவைப் பொறுத்தமட்டில் இங்குள்ள சிக்கல் என்ன? கொஞ்சம் மற்ற நாடுகளின் பாணியை பார்ப்போம். குறிப்பாக மேலை!

Prom Night :

பள்ளிப் பருவம் முடிகையில் இந்த விழா கொண்டாடப்படும். கிட்டத்தட்ட நம்ம ஊர் ஆண்டுவிழா போல். ஆனால் ஹை ஸ்கூல் மாணவர்களுக்கு மட்டும் நடத்தப்படும். இந்த நாளுக்கு மாணவ, மாணவிகள் ஜோடியாக வரவேண்டும். தன் மகளை prom nightக்கு அழைக்க ஒரு மாணவன் வருகிறான் எனில், பெற்றோர் வரவேற்பார்கள். ஒருவேளை யாரும் வரவில்லை எனில், கவலைப்படுவார்கள். தன் மகள் எதிர்பாலினத்தில் ஒருவனைக் கூட ஈர்க்கும் அளவுக்கு வளரவில்லையோ என. இதேதான் மாணவனுக்கும். அந்த விழா வெறுமனே ஜோடி நடனமும் சிறந்த ஆண், சிறந்த பெண், சிறந்த ஜோடி முதலியவற்றுக்கான விருதளிப்பும் கொண்ட விழா மட்டுமே. ஆனாலும் அடிப்படையில் சமூகரீதியாக இணைதேடலை அங்கீகரிக்கும் நிகழ்வு அது.விழாவின்போது வரும் ஜோடி முன்னமே காதலர்களாக இருக்கலாம். அல்லது பின்னர் காதலர்கள் ஆகலாம். அல்லது நண்பர்களாகத் தொடரலாம் அல்லது பிரிந்து அவரவர் வாழ்க்கைக்குச் செல்லலாம். எதற்கும் எவ்வித கட்டாயமும் இல்லை.

Dating :

இதற்கு பருவம், நேரம் எல்லாம் இல்லை. எப்போதும் நேரம்தான். தன்னை ஒருவர் ஈர்த்து, அவர் தனக்கான துணையாக இருக்கும் தகுதியும் புரிதலும் கொண்டவர்கள் என நினைப்பவர்களுக்கான வாய்ப்பு. தான் விரும்பும் வகையில் விரும்பப்படும் நபர் இருக்கிறாரா எனப் பரிசோதிக்கும் காலம்தான் டேட்டிங் காலம். Do you have a date? Shall we go for a date? இது ஒருநாளாக இருக்கலாம். ஒருவாரமாக இருக்கலாம். அல்லது ஒரு மாதமாக கூட இருக்கலாம். அதற்கு மேலும் இருக்கலாம். புரிதலின் கட்டம் வரும்வரை தொடரும். அல்லது உடையும்வரை தொடரும். தோகை விரித்து மயில் ஆடும் காலம் இது. உங்கள் அழகு, நற்பண்புகள் மட்டும் காண்பித்து இணையைக் கவர முற்படுவீர்கள்.

Love :

Datingம் சரியாகி தனக்கான துணையே என்ற நம்பிக்கை வருகையில்தான் இந்த அடுத்தகட்டம். இதை love என்று கூட சொல்லமாட்டார்கள். Relationship என்பார்கள். இன்னும் நெருக்கமாவார்கள். நெருக்கம் என்றதும் கலவி என ஆர்வமாகப் படிக்க வேண்டாம். கலவி எல்லாம் prom night காலத்துக்கும் முன்னமே அரங்கேறியிருக்கும். இவ்வளவு காலம் காத்திருக்க அது ஒன்றும் இந்தியா அல்ல. இந்த ரிலேஷன்ஷிப் காலகட்டத்தில் பெரும்பாலான ஜோடிகள் ஒரே வீட்டில் தங்கத் தொடங்குவார்கள். இணை தேடல் பரிசோதனையின் அடுத்த கட்டம். ஒரே கூரையின் கீழ் வாழ்கையில் இன்னுமே நம் முகமூடிகள் கழன்றுவிடும்.

வேலைகள், பொறுப்பு, பொறுப்பின்மை, அடுத்தவருக்கு உறுதுணையாக இருத்தல் எனப் பல விஷயங்களை பார்க்க முடியும். இந்த கட்டத்திலும் மனம் ஒப்பவில்லை எனில், மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு, 'வெளியே போடா அயோக்கிய ராஸ்கல்' என விலகி வந்துவிட முடியும்.

Marriage :

ரிலேஷன்ஷிப்பிலும் தேறி, பரஸ்பர நம்பிக்கை, மதிப்பு, புரிதல் என ஏற்பட்டபிறகுதான் அந்த முக்கியமான நாள். ஆண் மண்டியிட்டு அமர்ந்து மோதிரத்தை பெண்ணுக்கு கொடுத்து, 'Will you marry me?' என்னும் நாள். அப்போது அந்தப் பெண், 'Oh my god!' என உலக அழகி பட்டம் கிடைத்தது போல் கண்ணில் ஜலம் வைத்துக்கொண்டு சுற்றிமுற்றி அனைவரும் பார்க்கின்றனரா என பார்ப்பாள். ஏனெனில் அவளுக்கு அதுதான் பெருமைமிகு தருணம். ‘என் வாழ்க்கையை விலைமதிப்பற்றதாக கருதி ஒருவன் அதை பகிர்ந்துகொள்ள தலைவணங்கி கேட்கிறான் பாருங்கள்’ என கர்வமும் நிம்மதியும் கொள்ளும் தருணம்.

திருமணம் என்ற கட்டம் வருவதற்கே அங்கெல்லாம் அவ்வளவு காலம் பிடிக்கிறது. அவ்வளவு கஷ்டம் இருக்கிறது. இந்தியாவில் சிறுநீர் கழிக்கும் அளவுக்கு எளிதான விஷயம் திருமணம் செய்து கொள்வது. அதிலும் மேலைநாடுகளில், marriage proposal கட்டத்தையும் தாண்டி, பெண்ணின் பெற்றோர் வீட்டுக்கு ஆணும் ஆணின் பெற்றோர் வீட்டுக்கு பெண்ணும் சென்று முறைப்படி அறிவிக்க வேண்டும். அவர்களும் ஒப்புக்கொண்ட பின்னே கல்யாணம். அந்த கல்யாணமும் தேறவில்லை எனில், இருக்கவே இருக்கிறது விவாகரத்து.

இனி, நம்மூரில் என்ன நடக்கிறதென பார்ப்போம். ஒரு பெண் தன் ஆண் நண்பனை வீட்டுக்கு அழைத்து வரவே மாமாங்கம் காத்திருக்க வேண்டும். அதிலும் நிறைய பேச்சுகள் வரும். ஆண் ஒரு பெண்ணை தன் வீட்டுக்கு கூட்டி வர வேண்டுமென்றால் சொல்லவே வேண்டாம். சுவர்கள் கூட ரகசியம் பேசும். ஆணுக்கு பெண்ணைப் பற்றிய அறிவும் பெண்ணுக்கு ஆணைப் பற்றிய அறிதலும் இல்லாமலேயே பள்ளிக்காலத்தை முடிக்கிறார்கள். அவர்கள் எதிர்பாலினத்தை பற்றி அறிந்த எல்லா தகவலும் சினிமா, பத்திரிகை மற்றும் கேட்ட செய்திகள் மட்டும்தான். அதில் எள்ளளவும் உண்மை இருக்கப் போவதில்லை என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

பிறகு, தத்தக்காபித்தக்கா என தட்டுத் தடுமாறி சைட், 'கண்கள் இரண்டால்' பாடல், லெட்டர் என ஓடி, காதல் என சொல்லிக்கொள்ளும் நிலையை ஓர் ஆணும் பெண்ணும் அடைந்துவிடுவதாக வைத்துக்கொள்வோம். இங்கு அவர்கள் இழந்திருப்பது இரண்டை. Prom and dating. இந்த இரண்டு விஷயங்களையும் காதலில்தான் அவர்கள் செய்ய வேண்டியுள்ளது. ஆணை பெண் அறியவும் பெண்ணை ஆண் அறியவும், பின் கலவிக்கான முத்தாய்ப்புகளும் அதற்கும் பின், இவன் அல்லது இவள் தனக்கு சரியான துணையா என்பதையெல்லாம் இதற்குள்ளேயே செய்து முடிக்க வேண்டும்.

ஹும், எத்தனை சிரமம்? இதற்குப் பிறகு 'வேலைக்கு ஆகாது' என datingல் இருந்து விலகுவதைப் போல் விலகினால் இங்கு அது காதல் முறிவு என அழைக்கப்படும். 'அவ அவன்கூட நல்லா பழகிட்டு காசெல்லாம் செலவழிக்க வச்சுட்டு, கடைசில கழட்டி விட்டுட்டா.. வீட்ல சொல்றவன கட்டிக்கிட்டா', 'அவன்தான் மச்சி கெத்து.. முடிஞ்ச வரைக்கும் அந்தப் பொண்ணு கூட சுத்துனான்.. நல்லா என்ஜாய் பண்ணான்.. அப்புறம் எஸ்கேப் ஆகிட்டான்!' என்ற பேச்சுகளை நாம் கேட்பதெல்லாம் இப்படித்தான். ஏனென்றால் இங்கு நமக்கு பிரச்னை ஒன்றே ஒன்றுதான். கற்பு!. 'அவன் என்ஜாய் செஞ்சதும்', 'அவள் பழகியதும்' மட்டும்தான் நமக்கு பிரச்னையே தவிர அதைத் தாண்டிய உணர்வு, உயிரியல் தேவை, தனிமை எல்லாம் அல்ல.இந்த லட்சணத்தில் எங்கே ரிலேஷன்ஷிப், 'ஒன்றாய் தங்குவது' எல்லாம்? நேரடியாக திருமணம்தான்.

அந்த திருமணத்தில்தான் மேற்சொன்ன ரிலேஷன்ஷிப் மற்றும் 'ஒன்றாய் தங்கல்' எல்லாம் வெளிப்படும். ஆனால் இச்சமயத்தில் ஆணும் சரி, பெண்ணும் சரி, உறவில் இருந்து வெளியேற முடியாதபடிக்கு இருவருக்கும் சமூகம் ஆப்படித்து செருகியிருக்கும் திருமணம் என்ற பெயரில்! ரிலேஷன்ஷிப் அல்லது 'ஒன்றாக தங்கல்' என்பதையும் தங்கள் கேடுகளுக்கு ஒரு கூட்டம் பயன்படுத்தி கொள்வதெல்லாம் சுத்த அரைவேக்காட்டுத்தனம். தனக்கான துணை அல்ல என்ற புரிதலுக்குப் பின் வாழும் ஜீவனற்ற மிச்ச வாழ்க்கைதான் திருமண வாழ்க்கை என்பது. இதனால்தான் marital rape, suicide, murder எல்லாம் நிகழ்கின்றன.

ஒரு பெண் தனக்கு முத்தமிட வரும் காதலனை தள்ளிவிடுவதில்தான் தன் குடும்ப கவுரவம் இருப்பதாக நினைக்கிறாள். விருப்பமில்லையென விலகினாலும் தான் விரும்பிய பெண்ணை மணப்பதுதான் காதலின் நேர்மை என ஆண் நினைக்கிறான். இங்கே எங்கு உன் குடும்பம் வந்தது, உன் நேர்மை வந்தது? ஆணை புரியாத பெண்ணையும் பெண்ணை புரியாத ஆணையும் ஆண், பெண் உறவு புரியாத சமூகத்தையும் வைத்துக்கொண்டு உண்மையிலேயே நம் நாட்டில் rape செய்யப்பட்டுவது மனித உணர்வுகள்தான்.

ஓர் இயல்பான இணை தேடலுக்குக் கூட வழி இல்லாமல், எல்லாவற்றையும் அடைத்து வைத்து சிந்திப்பதற்கு பெயர் பண்பாடு இல்லை. விவாகரத்துகள் அதிகம் ஆகிக் கொண்டிருக்கின்றன. இன்னுமே அதிகம் ஆகும். காரணம் இளைஞர்கள் அல்ல. காதலர்களும் அல்ல. சமூகம்தான். அதன் கட்டுப்பெட்டி கட்டுப்பாடுகள்தான். மேலை நாட்டின் மூலதனத்துக்கு வேலை பார்க்கும்படி இளைஞர்களை பணித்துவிட்டு, அவர்களின் கலாசாரத்தை மட்டும் ஏற்காதே என சொன்னால் எப்படி? பணம் கொண்டுவரும் எதையும் ஏற்கும் சமூகத்தைத்தான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம்.

புத்திசாலித்தனம் என்பது, இங்கு இருக்கும் இந்த பாணி உறவுநிலைகளையும் இணை தேடல்களையும் ஆண், பெண் உறவுகளையும் காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்றாற்போல் இலகுவாக்குவதுதான். இல்லையெனில் முறிவுகள் அதிகமாக இருக்கும்; மனதிலும் மணத்திலும்! தனிமை தேடும் நபர்களும் அதிகமாவார்கள். அவர்கள் தனிமையில் என்ன செய்கிறார்கள் என்பதையும் உங்களால் ஊகிக்கவே முடியாது. ஆகவே பெண்ணை அறிதலும் ஆணை அறிதலும் இயற்கையே.

இணையாக விரும்பி விருப்பம் தெரிவிப்பது ஆகச் சிறந்த நாகரிக நிலை. அதிகாரம் காதலை மறுக்கும். அதிலும் மதம் கொண்ட அதிகாரம் காதலை அழிக்கவே முற்படும். அதிகாரம் மறுத்த காதலை சேர்த்து வைத்ததற்காக கொல்லப்பட்டவனின் நினைவாகத்தான் இன்றைய நாளையே கொண்டாடுகிறோம். காதல் மறுத்த அதிகாரங்கள் வரலாற்றில் காணாமல் போயிருக்கின்றன. ஒடுக்குமுறையை தாண்டிய காதல்கள் வரலாற்றில் இடம்பிடித்திருக்கின்றன. காதலைக் கொண்டாடுங்கள் தோழர்களே இயற்கையாக, அரசியலாக, சமூகமாக! காதலர் தின வாழ்த்துகள்.

Also Read: அசாதாரண காதலை விதைத்த சாதாரண வசனம் : ‘காதலர் தினம்’ நினைவுகள்! #20YearsOfKadhalarDhinam