உணர்வோசை

இனியாவது தமிழகத்தையும், தண்ணீர் பஞ்சத்தையும் வேலுமணி புரிந்துகொள்வாரா?- நேரடி சாட்சியம்

சென்னை கடுமையான தண்ணீர் பஞ்சத்தைச் சந்தித்து வருகிறது. கடந்த 13ம் தேதி சென்னை அனகாபுத்தூரில் உள்ள ஒரு குடியிருப்பில் அதிகமாக தண்ணீர் பிடித்ததை தட்டிக் கேட்டதன் காரணமாக ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். திருச்சியில் ஆனந்த்பாபு என்பவர் அதிகளவில் தண்ணீர் எடுத்த குடும்பத்தை தட்டிக் கேட்டதற்காக கொல்லப்பட்டிருக்கிறார். சென்னையில் குடிநீர் தொட்டிகள் முன் குடங்கள் அணிவகுத்து நிற்கின்றன. குடங்களுடன் வாகனங்களில் பக்கத்து ஏரியாக்களுக்கு சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டிய அவலம். பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் ‘தண்ணீர் பற்றாக்குறையால் கழிவறை மூடப்பட்டிருக்கிறது’ என நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கிறது. குடிநீர் லாரிகளின் விலை ரூ.700 லிருந்து சில ஆயிரங்களாக உயர்ந்திருக்கின்றன. குடியிருப்புகள் லாரிகளை பதிவு செய்தாலும் வருவதற்கு மாதக் கணக்கில் காக்க வேண்டிய நிலை.

தண்ணீர் பஞ்சத்தின் கடுமை எந்தளவுக்கு உண்மையாக இருக்கிறதெனில் அரசின் எல்லா சலுகைகளும் வசதிகளும் தங்கு தடையின்றி கிடைக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் கூட பாதிக்குமளவுக்கு நிலை இருக்கிறது. சென்னை OMR சாலையில் இருக்கும் பல ஐ.டி நிறுவனங்களும் பார்க்குகளும் தண்ணீர் பஞ்சத்தை ஒட்டி பலவித நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக செய்திகள் சமீபமாக வந்தன. தங்களின் ஊழியர்களில் பலரை Work From Home என்கிற பாணியில் வீட்டிலிருந்தபடி வேலை பார்க்குமாறு நிறுவனங்கள் அறிவுறுத்திய செய்திகளும் அதில் அடக்கம். மக்களுக்கு பாதிப்பு என்கிற வகையில் செய்திகள் இருந்தவரையில் பொருட்படுத்தாத அரசு, நிறுவனங்களும் பன்னாட்டு முதலீடும் சிக்கலுக்குள்ளானதும் ஊடகங்களை சந்தித்தது.

தமிழகத்தில் இருக்கும், ஏதோவொரு சென்னையில், ஏதோவொரு கற்பனை பகுதியில், வசிக்கும் நல்வாய்ப்பு பெற்ற உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி நேற்று ஊடகங்களை சந்தித்தார். தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை என்னும் செய்தியை வதந்தி என்றார். நிலத்தடி நீர் மட்டும் குறைவதால், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் கூறினார். நிலத்தடி தண்ணீர் குறைந்து, குடிநீர் மட்டும் குறையாமல் எப்படி அபரிமிதமாக மக்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது என்கிற அறிவியல் உண்மை உள்ளாட்சி துறை அமைச்சருக்கே வெளிச்சம். அதையும் தாண்டி அமைச்சர் ‘Work from home' என்கிற பாணி வேலை பார்த்தல் ஐ.டி நிறுவனங்களில் இயல்புதான் என்றும் மற்றபடி, ஐ.டி நிறுவனங்களில் தண்ணீர் பற்றாக்குறை என்ற செய்திகள் உண்மை அல்ல எனவும் கூறியிருந்தார்.

துரதிர்ஷ்டவசமாக நமக்கு அருகேயே இருக்கும் OMR பகுதியில் என்ன நிலவரம் இருக்கிறது என்று பார்த்துவிட முடிவு செய்து கிளம்பினோம். ஐ.டி ஊழியர்களின் சங்கமான 'UNITE' அமைப்பின் பொதுச்செயலாளர் வெல்கினை சந்தித்தோம்.

வழக்கமாக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை நட்டாற்றில் விடும் பாணியிலேயே விட்டிருக்கின்றன. பல ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கின்றனர். வீட்டில் மட்டும் தண்ணீர், மின்சாரம் எல்லாம் எப்படி கிடைக்கும் என்ற கேள்விக்கு பதில் இல்லை. அவற்றுக்கு ஆகும் செலவையாவது நிறுவனம் கொடுக்குமா என்றால் அதற்கும் பதிலேதும் இல்லை. எந்தச் சட்ட பாதுகாப்பும் இல்லாத ஐ.டி நிறுவன ஊழியர்கள் தங்களின் வேலைகளைப் பாதுகாக்கும் பொருட்டு வேறு வழியின்றி கூடுதல் சுமையை சுமக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்கிறார் வில்கின்.

பல நூறு ஊழியர்கள் இருக்கும் தளத்தில் குளிர்சாதன வசதி சில மணி நேரங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. குழாய்களில் வரும் தண்ணீர் பல நிறங்களில் வருகிறது. என்ன வகை தண்ணீர் என்று தெரியாமல் பயன்படுத்த வேண்டிய நிலை. தண்ணீர் பற்றாக்குறை காரணத்தால் மூன்று தளங்களுக்கு ஒரு கழிவறை மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது.

ஐ.டி நிறுவனங்கள் சந்தித்திருக்கும் தண்ணீர் பற்றாக்குறையை அமைச்சர் வேலுமணி அறியாமலிருக்கமாட்டார். ஏதொவொரு வகையில் ஐ.டி நிறுவனங்களின் தண்ணீர் பற்றாக்குறை தீர்க்கப்படும் என்ற உறுதியே நேற்றைய ஊடகச்சந்திப்பின் நோக்கமாக இருந்தது. நிறுவனங்களின் இயக்கத்துக்கும் லாபங்களுக்கும் உத்தரவாதம் கொடுக்க முனையும் அரசு, தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக ஊழியர்களின் வேலைக்கும் சம்பளத்துக்கும் சுகாதாரத்துக்கும் ஏற்படவிருக்கும் பாதிப்பை பற்றிப் பேச விரும்பவில்லை.

ஐ.டி ஊழியர்களின் சங்கமான UNITE-ன் பொதுச் செயலாளர் வெல்கின், ‘ஐடி நிறுவனங்களுக்கென உலகவங்கி விதிமுறை ஒன்று இருக்கிறது. பஞ்ச காலங்களில் ஊழியர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் என்கிற விதிமுறை. ஆனால் அதற்கு அரசு தண்ணீர் பஞ்சம் நிலவுவதை ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நிறுவனங்களை பஞ்ச கால ஊதியத்துக்கு நிர்ப்பந்தப்படுத்த முடியும். அமைச்சர் அதனாலேயே தண்ணீர் பஞ்சம் இல்லையென்பது போல் பேசுகிறார். இந்த நிலை தொடருமானால், ஐடி நிறுவனங்கள் இருக்கும் பகுதிகளில் வாழும் மக்களை திரட்டி ஐடி ஊழியர்கள் தலைமையில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியதிருக்கும்’ எனக் கூறுகிறார்.

பெரும் நிதியுதவி அளிக்க வேண்டுமென்கிற காரணத்தாலேயே பேரிடர்களை பேரிடர் என அறிவிக்காத மத்திய அரசுக்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. மக்களை ஒடுக்கி, பஞ்சத்தை மறைத்து, பொய் பேசி, வேலைகளைப் பறித்து, ஊழியர்களின் வயிற்றில் அடிப்பதில் இரண்டு அரசுகளுமே ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. தண்ணீர் பஞ்சம் என்ற ஒற்றை கண்ணியில் மொத்த மக்களும் திரண்டால், ஒருவேளை அமைச்சர் வேலுமணிக்கு தண்ணீர் பஞ்சமும் சென்னையும் தமிழ்நாடும் புரிபடலாம் ! அப்போது ஒரு கோப்பை குடிநீருக்காக சில உயிர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் !