murasoli thalayangam
மவுனமாக இருந்து உரிமைகளை அடகு வைக்கும் விஜய் : உச்சநீதிமன்றத்தின் 2 தீர்ப்புகளை சுட்டிக்காட்டும் முரசொலி!
முரசொலி தலையங்கம் (24-11-2026)
உரிமையை நிலைநாட்டாத த.வெ.க. அரசு!
உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் இரண்டு முக்கியமான தீர்ப்புகளில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டத் தவறி இருக்கிறதுத.வெ.க. அரசு.
காவிரி வழக்கில் தமிழ்நாடு அரசின் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித் துள்ளது உச்சநீதிமன்றம். த.வெ.க. அரசு உரிய வாதங்களை வைக்காதது தான் இதற்குக் காரணம்.
தமிழ்நாட்டுக்கு உரிமையான காவிரி நீரை கர்நாடக அரசு வழங்கவில்லை. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதம் ஒரு வழக்கும், செப்டம்பர் மாதம் இன்னொரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1.6.2026 முதல் 9.9.2026 வரையிலான காலக்கட்டத்தில் கர்நாடகம் தர வேண்டிய 16.01 டி. எம். சி. நீரை தர உத்தரவிட வேண்டும் என்பது தான் தமிழ்நாடு அரசின் கோரிக்கை. தமிழ்நாட்டின் உரிமை இது. ஆனால் இந்த இரண்டு வழக்குகளும் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பானது தமிழ்நாடு கேட்டதைக் கொடுப்பதாக இல்லை. “தவறான புரிதலின் கார- ணமாக இம்மனுக்களை தமிழ்நாடு போட்டுள்ளது” என்று சொல்லி தள்ளுபடி செய்துள்ளார்கள். காவிரி நீர் திறப்பை கண்காணிக்கும் பொறுப்பு நிபுணர் குழு வைத்துள்ளது. அவர்கள் கையாண்டு வரும் நிலையில் இந்த மனு தேவையற்- றது என்கிறார்கள் நீதிபதிகள்.
அந்தக் குழு சரியாகக் கண்காணிக்கவில்லை. ஜூன் – ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் வழங்க வேண்டிய 26.954 டி.எம்.சி. நீரை கர்நாடகம் வழங்கவில்லை. அதைக் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தால் வாங்கித் தர முடியவில்லை என்பது தானே வழக்கு. அதே போல் இன்னொரு வழக்கும் தமிழ்நாட்டுக்கு செப்டம்பர் மாதம் வரை தர வேண்டிய நீரைத் தரவில்லை என்பதுதான். காவிரி குழு வினால் கொடுங்கள் என்று சொல்ல மட்டுமே முடியும். கொடுக்கவில்லை என்றால் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியுமா? முடியாது. அதற்கு எந்த அதிகாரமும் இல்லை.
இதைச் சொல்லி த.வெ.க. அரசு வாதங்களை வைத்திருக்க வேண்டாமா? காவிரி குழு சொல்லி விட்டால், கிடைத்து விட்டதாக அர்த்தமா? காவிரி குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என வாதிட்டிருக்க வேண்டாமா த.வெ.க. அரசு? ஒன்றிய அரசு மீது என்ன பயம்?
‘எங்களிடமே தண்ணீர் இல்லை, நாங்கள் எப்படி தண்ணீர் விட முடியும்?' என்று கேட்கிறார் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார். இதைச் சொல்லி வாதிட்டிருக்க வேண்டாமா த.வெ.க. அரசு? கர்நாடக காங்கிரஸ் அரசு மீது என்ன பயம்?
காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகிய இரண்டுக்கும் அடங்காமல் கர்நாடக அரசு செயல்பட்டு வருவதை ஆதாரங்களுடன் சொல்லி இருந்தால் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்குமா? 'அவர்கள் வேலையை எங்களைப் பார்க்க வைக்காதீர்கள்' என்கிறது உச்சநீதிமன்றம். 'அவர்கள் வேலையை, அவர்கள் பார்க்கவில்லை' என்பது தானே வழக்கே. இதை நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தி இருக்க வேண்டாமா?
“தமிழ்நாட்டுக்கு இனி எந்த வழியும் இல்லை, அவர்கள் தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது” என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துள்ளார் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் முதலமைச்சர் டி.கே.சிவக்குமார். இந்த அவமானம் நமக்குத் தேவையா?
அடுத்தது திருப்பரங்குன்றம் தீப தூண் விவகாரம் ஆகும். எந்த விதமான சட்டபூர்வமான, நியாயமான காரணங்கள் சொல்லாமல், 'உச்சியில் உள்ள தூணில் இந்த ஒரு முறை மட்டும் தீபம் ஏற்றிக் கொள்ளலாம். இதை சட்டபூர்வமான அங்கீகாரமாக எப்போதும் சொல்லக் கூடாது' என்று தீர்ப்பு தந்துள்ளது உச்சநீதிமன்றம். த.வெ.க. அரசு உரிய முறையில் வாதங்களை வைக்கவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.
‘“கார்த்திகை தீபத்திற்கு சில நாட்களே உள்ளபோது, உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவு நடைமுறைப் படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது” என்று கூட்டணியில் உள்ள அமைச்சர் ஒருவர் சொல்லி இருக்கிறார். இதுதான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடா?
இடைக்கால உத்தரவுக்கு எதிரான மேல் முறையீடு செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சொன்ன பிறகு, சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது த.வெ.க. அரசு. 'சும்மா போடுவோம்' என்ற அடிப்படையில் இதனைச் செய்துள்ளார்கள் என்றே கருத வேண்டி உள்ளது.
"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் த.வெ.க. அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை முதலமைச்சர் விஜய் விளக்க வேண்டும்” என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள். முதல்வர் இதிலாவது வாய் திறப்பாரா?
இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பாக முதலமைச்சர் வாய் திறந்துள்ளாரா? அவர் இதுவரை எதற்காவது வாய் திறந்துள்ளாரா இல்லை. மவுனமாக இருந்து உரிமைகளை அடகு வைக்கிறார். மவுனமாக இருந்து கொள்கைகளை காவு கொடுக்கிறார்.
Also Read
-
தவெக எம்.எல்.ஏ.வின் தகாத குறுஞ்செய்தி.. உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி - பதில் சொல்லுமா விஜய்யின் தவெக அரசு?
-
“கடந்த ஆண்டு 82.78% இருந்த தண்ணீர் இருப்பு... இன்று வெறும் 36.28% தான்!” : டி.ஆர்.பி.ராஜா கண்டனம்!
-
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒருங்கிணைப்புக் குழு... கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு!
-
அதிகாரிகள் முன்னிலையில் தவெக அமைச்சர்களின் அரசியல் தாக்குதல்.. ஆரோக்கியமான மரபா? : இ.பரந்தாமன் கேள்வி!
-
“டெல்டா விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத த.வெ.க அரசு” : 7 பேர் கொண்ட குழு அமைத்த தி.மு.க தலைவர்!