murasoli thalayangam

“மொத்த மக்களும் பீதியில் வாழ்வது டி.ஜி.பி.க்குத் தெரியாதா?” : முரசொலி தலையங்கம் கடும் கண்டனம்!

எந்த தேசத்தில் இருக்கிறார் டி.ஜி.பி.?

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக மகேஷ்குமார் அகர்வால் என்பவர் இருக்கிறார். இப்படி ஒருவர் இருக்கிறார் என்பதே ஆறு மாதம் கழித்து இப்போதுதான் தெரிய வந்துள்ளது. அவர் பேட்டியைப் படித்தபோது, அவர் எந்த தேசத்தில் இருக்கிறார் என்று கேட்கத் தோன்றுகிறது.

எங்கும் கொலைகள், அரிவாள் வெட்டுகள், கொள்ளைகள், சங்கிலிப் பறிப்புகள், பாலியல் வன்கொடுமைகள், குழந்தை கடத்தல்கள், போதை மருந்து குவிப்பு -– இதுதான் த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு நாம் பார்க்கும் தமிழ்நாடு. ஆறு மாதம் கழித்து வெளியில் வந்திருக்கும் டி.ஜி.பி. சொல்கிறார், ‘ தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன’ என்று.

‘தினமும் எனது கடையை மூடிவிட்டு இரவு 11 மணிக்கு காரில் வீட்டுக்குச் செல்வேன். நாலைந்து மாதமாக பயமாக இருக்கிறது’ என்று ஒரு பெண் சமூக ஊடகத்தில் பேட்டி கொடுத்துள்ளார். இதுதான் விஜய் ஆட்சி. மொத்த மக்களும் பீதியில் வாழ்வது டி.ஜி.பி.க்குத் தெரியாதா?

மதுரையில் ஒரு பெண் மீது பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. வழக்கு பதியப்பட்டுள்ளது. அமைச்சர் தலையிட்டதால் நடவடிக்கையே இல்லை. இத்தனைக்கும் பாதிக்கப்பட்டவர் காவல் துறை குடும்பத்தைச் சேர்ந்தவர். இதுதான் பெண்களைப் பாதுகாக்கும் லட்சணமா?

எல்லாக் கொலைகளும் தனிப்பட்ட காரணங்களால்தான் நடந்துள்ளதாம். டி.ஜி.பி. ஆறு மாதமாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகக் கூட கொலைகள் செய்யலாம் என்ற துணிச்சல் எப்போது ஏற்படும்? அரசாங்கத்தின் மீது, காவல் துறையின் மீது, சட்டத்தின் மீது பயமில்லாத சூழலில்தான் ஏற்படும். இந்த பயம் அற்றுப் போன இடம்தான் அமைதி செத்துப் போன இடம். அதைத் தான் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று சொல்கிறோம்.

அரிவாள் வெட்டுகள் எதன் அடையாளம்? கூலிப்படை கொத்துக் கொத்தாக அலைகிறது என்பதன் அடையாளம்?

‘கொலைகள் அதிகமாகி வருகிறது. அதனால் மக்களுக்கு பயம் ஏற்படுகிறது. வாழ அச்சப்படுகிறார்கள்’ என்று சொன்னால், அதைத் தடுக்க முடியாத டி.ஜி.பி., ஒவ்வொரு கொலையாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார். கொலைக்கான ஆராய்ச்சியை நீதிமன்றங்கள் பார்த்துக் கொள்ளும். நீதிமன்றங்களின் வேலை அதுதான். டி.ஜி.பி.யாக இருக்கக் கூடியவர் அமைதியைக் குலைக்க நடக்கும் அத்தனை சம்பவங்களையும் நடக்காமல் தடுக்க வேண்டிய கடமையைச் செய்தாரா என்பதே கேள்வி!

ரவுடியிசத்தால் ஒரு சதவிகிதக் கொலைகளே நடந்துள்ளன என்கிறார் டி.ஜி.பி. ஒரு சதவிகிதம் என்றால் எத்தனை சார்? அந்த ஒரு சதவிகித கொலைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டார்களா?

செஞ்சியில் சிறுமி காணாமல் போய் ஒரு மாத காலம் ஆகிறது. ஒரு துளியைக் கூட த.வெ.க. ஆட்சி கண்டுபிடிக்கவில்லை. ‘விசாரிக்கிறோம்’ என்கிறார். எப்போது? எத்தனை மாதம் கழித்து? எத்தனை ஆண்டுகள் கழித்து?

சட்டம் ஒழுங்கின் மிக மோசமான நிலைமைதான் குழந்தைக் கடத்தலும் போதைப் பொருள் நடமாட்டமும் என்பது தெரியாதா, டி.ஜி.பி. அளவுக்கு வளர்ந்த ஒருவருக்கு? இந்த இரண்டும்தான் நாட்டில் அதிகம் நடக்கிறது. மறுக்க முடியுமா அவரால்?

காவல் துறை அதன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதன் அடையாளம்தான் சிறையில் இருந்து கைதிகள் தப்பிப்பதும், காவல் நிலையத்தில் கைதிகள் கொலை செய்யப்படுவதும். இந்த இரண்டும் நாட்டில் நடக்கவில்லை என்று மறுக்க முடியுமா அவரால்?

தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 பேர் ஹாயா தப்புகிறார்கள். ‘இது நான் டி.ஜி.பி.யாக இருந்தபோது நடந்தது’ என்று சொல்ல முடியுமா அவரால்?

இதுவரை எத்தனை காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளன. இதற்காக ஒரு டி.ஜி.பி. பொறுப்பேற்றுக் கொண்டாரா? செக்கானூரணி காவல் நிலையத்தில் கொல்லப்பட்ட பாலகிருஷ்ணன் உடல் பரிசோதனையை அறிக்கையைப் பார்த்தீர்களா டி.ஜி.பி. சார்? பாலகிருஷ்ணன் தன்னைத் தானே தாக்கிக் கொண்டாரா? அல்லது அவரை செக்கானூரணி காவல் நிலையத்துக்குள் வந்து பேய் தாக்கிவிட்டதா? காவல் நிலையத்துக்கு வெளியே வேறு நபரால் பாலகிருஷ்ணன் இப்படி தாக்கப்பட்டு இருந்தால் என்ன தண்டனை? எத்தனை செக்ஷன் போடுவீர்கள்?

அந்த பாலகிருஷ்ணன் குடும்பத்தை என்ன பாடு படுத்தினீர்கள்? ‘இனி எங்களால் போராட முடியாது, அந்த சக்தி இல்லை’ என்று ஐந்து நாட்கள் கழித்து உடலை வாங்கிக் கொண்டார்கள். இதுதான் மக்களாட்சியின் குணமா? முதலமைச்சருக்குதான் ஈரம் இருக்காது. எந்த உயரதிகாரிக்கும் இல்லையா?

போதைப் பொருள் ஒழிப்பில் அதிக வழக்குகள் பதிந்துள்ளாராம். தனக்குத்தானே மெடல் குத்திக் கொள்கிறார் மகேஷ்குமார் அகர்வால். அவர் பேட்டி கொடுத்த மறுநாள் (நேற்றைய தினம்) 71.24 கிலோ ஹெராயின் சென்னையில் பிடிக்கப்பட்டுள்ளது. ‘2026 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரே நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய அளவிலான ஹெராயின் இது’ என்று ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதைக் கண்டுபிடித்தது த.வெ.க. ஆட்சி அல்ல. போதையை ஒழிக்க வந்த விஜய் போலீஸ் அல்ல. மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள்.

இதே போல் நாகப்பட்டினத்தில் கடந்த அக்டோபர் மாதம் 137 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை இதே மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பிடித்தார்கள். கடத்தியவர் த.வெ.க. நிர்வாகி பூபாலன்.

காவல்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறதாம். பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதியும் சுதந்திரம் இருக்கிறதா? தூத்துக்குடியில் சட்டவிரோத சூதாட்ட கிளப் நடத்தியதாகத் தேடப்படும் குற்றவாளி, அமைச்சரோடு ஒரு விழாவில் கலந்து கொள்கிறார். அவரைக் கைது செய்யும் சுதந்திரம் இருக்கிறதா? த.வெ.க. நிர்வாகிகளால் மக்கள் பதற்றத்தில் வாழ்கிறார்கள் பல இடங்களில்! தடுக்க முடிந்ததா அவரால்?

ஒரு முன்னாள் முதலமைச்சருக்கு, அவர் வீட்டுக்கு, அவர் வசிக்கும் சாலைக்கு இருந்த பாதுகாப்பை விலக்குவதால் கிடைக்கும் அற்ப சந்தோஷத்தில் திளைக்கும் போலீஸ் தலைமைக்கு நாட்டைப் பற்றியோ மக்களைப் பற்றியோ என்ன கவலை இருக்கும்? இதைச் செய்து முதலமைச்சரிடம், பத்து மார்க் வாங்கினால் போதும்! அவ்வளவுதான்!

Also Read: குற்றங்களைக் குறைக்க ‘யாக பூஜை’... உத்தரப் பிரதேசத்தைப் பின்தொடரும் தமிழ்நாடு! - த.வெ.க. ஆட்சியின் அவலம்!